ஒற்றன்..!

July 2022

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

தற்போது வட மாகாணத்தில் பலா் மத்தியில் தற்போது பேசு பொருளாக மாறி இருப்பது மூத்த அதிகாரிகளை வடமாகாண ஆளுநர் தூக்கி எறிந்து விட்டாராம் என்பதுதான்.

ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் இடமாற்றங்கள் இரு வகையாக மேற்கொள்ளப்படுகின்றது.

மாகாண அமைச்சுக்களில் இடமாற்றங்களை மேற்கொள்ளல் அல்லது அமைச்சுக்களில் இருந்து மத்திக்கு விடுவித்தல்.

இதன் அடிப்படையில் வட மாகாண ஆளுநரினால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த இளங்கோவன் உள்ளூராச்சி அமைச்சுக்கு இடமாற்றப்பட்டதோடு வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த செந்தில்நந்தனன் வடக்கு மாகாண பேரவைக்கும் இடமாற்றம் பெற்றிருந்தார்.

தற்போது இருவரையும் மத்திக்கு விடுவித்ததாக ஆளுநர் தரப்பால் எழுத்தம் மூலம் அறிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் மூத்த அதிகாரிகளாக 25 வருடங்களுக்கு மேலாக இளங்கோவன் மற்றும் வட மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் இத்தனை வருடங்களாக இருப்பது பலருக்கு தெரியாது.

உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக இருந்த இளங்கோவன் தனது வருடாந்த இடமாற்ற விண்ணப்பத்தில் மத்திக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தமை ஆளுநர் தூக்கி எறிந்து விட்டார் எனக் கூறுபவர்களுக்கு தெரியாத விடயம்.

வட மாகாண ஆளுநராக இருந்த சாள்ஸ் காலத்தில் வடக்கின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளரும் ஆளுநரின் செயலாளராக இருந்த சத்தியசீலன் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதே காலப்பகுதியில் விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த மூத்த அதிகாரிகளில் ஒருவரான தெய்வேந்திரம் வடக்கிலிருந்து மத்திக்கு வெளியேற்றப்பட்டார்.

இவை அனைத்தும் அப்போதைய ஆளுநர் காலத்தில் நடந்த போது பெரிதாக எவரும் அலட்டிக் கொள்ளவில்லை .

அதுமட்டுமல்லாது தற்போது வட மாகாண விவசாயப் பணிப்பாளராக உள்ள சிவகுமார் மாகாண பணிப்பாளராக வரும்போது அதே பதவியில் அமரக்கூடிய தரம் ஒன்றில் ஒரு அதிகாரி இருந்த நிலையில் அப்போதைய வடமாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் அரசியல் பிரமுகர் ஒருவரின் சிபாரிசின் போரில் குறித்த பதவியை தட்டிப் பிடித்தார் என்பதும் பலருக்கு தெரியாது.

வடக்கு மாகாண அமைச்சுகளில் இருக்கும் செயலாளர்கள் வரிசையில் இளங்கோவன் மீது பல்வேறு தரப்பினரும் அதிகப்படியான முறைகேடுகள் நிர்வாக குற்றச்சாட்டுக்கள் என அப்போதைய ஆளுநர் சாள்ஸ் இடம் கையளித்திருந்தனர்.

ஆனால் அப்போதைய ஆளுநரால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமைக்கு ஆளுநரே அவரிடம் செஞ்சோற்று கடன் தீர்க்க வேண்டியதாயிற்று அதை பிறகு கூறுகிறேன்.

இவ்வாறான நிலையில் ஆளுநர் சாள்ஸ்சின் நிர்வாகம் தொடர்பில் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி செயலகம் வரை சென்றது.

தானாக முன்வந்து ஆளுநர் பதவியை தந்த ஜனாதிபதி தன்னை மாற்ற மாட்டார் என தைரியமாக இருந்த சாள்ஸ் சர்ச்சைகள் ஆரம்பித்து ஒரு சில கிழமைக்குள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின் ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டார்.

அவர் வடக்குக்கு தலைமை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்க முன்னரே வடக்கிலிருந்து பாதிக்கப்பட்ட சில அதிகாரிகள் கொழும்பு சென்று வடக்கில் இடம்பெற்ற மோசடி விவரங்களை வழங்கி பிள்ளையார் சுழி போட்டார்கள்.

ஆளுநராக ஜீவன் தியாகராஜ தேர்வு செய்யப்பட்டபோத
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிபார்சின் பெயரில் தெரிவு செய்யப்பட்டதாக பேசப்பட்டது.

சிலர் சுமந்திரன் தரப்பை அனுகி வடக்கு ஆளுநரை வசப்படுத்தலாம் என சில அதிகார வர்க்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டார்கள் ஒரு கட்டத்தில் சுமந்திரன் நான் சொல்வதைக் கூட அவர் கணக்கெடுக்கிறார் இல்லை என சிரித்துக்கொண்டே கூறினாராம்.

சந்தர்ப்பம் பார்த்திருந்த அவர்கள் ஆளுநர் வடக்குக்கு வந்த போது தனித்தனியாக சென்று ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் கட்டு கட்டாக குற்றச்சாட்டுகளையும் வழங்கினா்.

அவ்வாறான நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கம் அப்போதைய கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த இளங்கோவன் மீது 90 பக்கம் அடங்கிய நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தது.

செந்தில் நந்தனன் நல்லூர் பிரதேச செயலாளராக இருந்து பெருந்தொட்ட அமைச்சின் செயலாளராக மத்திக்குச் சென்றவர்.

அமரர் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது செயலாளராக கடமை ஆற்றிய செந்தில் நந்தனிடம் ஒருமுறை ஆறுமுகம் தொண்டமான் கேள்வி எழுப்பியமை சுவாரசியமான விடயம்.

செயலாளரே நீங்கள் வருவதையும் போவதையும் தான் நான் காண்கிறேன் ஆனால் செயல்பாடுகள் ஒன்றும் இடம் பெறுவதாக தெரியவில்லை என அவரிடம் நேரடியாகவே கேட்டிருந்தாராம்

அத்தோடு வேறு வழியின்றி ஆறுமுகம் தொண்டமான் இவரை வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுக்கவே போன வேகத்தில் மீண்டும் வடக்குக்கு வந்தார்.

வடக்குக்கு வந்த வருடம் சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியை கிடைத்ததும் மீண்டும் அதே பிரச்சினையை வடக்கு ஆளுநர் எழுப்ப ஆரம்பித்தார்.

வடக்கு சுகாதார அமைச்சில் நிர்வாக முறைகேடுகள் இடம் பெறுவதாக ஆளுநர்களுக்கு தாதியர் சங்கம் வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடிதங்கள் அனுப்ப ஆளுநருடன் முறுகல் ஏற்பட்ட வட மாகாண பேரவை செயலகத்திற்கு மாற்றப்பட்டார்.

இளங்கோவனை பொறுத்தவரையில் வடக்கில் அவர் வகித்த பதவிகளில் அனேகமானவை ஆளுநரின் செயலாளர் கல்வி அமைச்சின் செயலாளர்.

இதன் காரணமாக பல்வேறு கீழ்நிலை அதிகாரிகள் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாமல் இருந்த நிலையில் சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்திய கீழ்நிலை அதிகாரிகள் தற்போதைய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் இளங்கோவனை ஆதாரத்துடன் போட்டுக் கொடுத்தார்கள்.

ஆக மொத்தத்தில் இளங்கோவன் ஆதாரங்களுடன் மாட்டியது சிலருக்கு தூக்கிவாாிப்போட்டிருக்கலாம் என தோன்றுகிறது .

செந்தில்நாந்தனன் வெளியேற்றப்பட்டமை நிர்வாக திறன் அல்லாத ஒரு அதிகாரியை வைத்து வேலை செய்ய முடியாது என கருதியதால் அவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம்.

ஆக மொத்தத்தில் வடக்கு ஆளுநராக யார் வந்தாலும் வடக்கில் இருந்து அதிகாரிகள் கொழும்புக்கு மாற்றப்படுவதும் அமைச்சுக்களில் இடமாற்றம் செய்வதும் இன்று நேற்று நடைபெறும் விடயங்கள் அல்ல.