SuperTopAds

ஒற்றன்..!

June 2019

நான் செல்வநாயகம் பேசுகிறேன்!!

அன்புத் தம்பிகளே! ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்சியை துவக்கினேன். இன்று எனது பெயரை வைத்துக்கொண்டு நான் உருவாக்கிய கட்சியைப் பயன்படுத்தி, எனது கொள்கையை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதுடன், அதன் அரசாங்கத்தை என்ன விலைகொடுத்தும் காக்கத் துணிகிறீர்களே அப்படி நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்?

எனது நோயின் காரணமாக யைக் காரணமாக என்னால் பேச முடியாது என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி அன்று அமிர்தலிங்கம் நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்லி என்னை அன்புடன் தந்தை செல்வா என்று வாஞ்சையுடன் அழைத்த எனது மக்களைத் தவறாக வழிநடத்தினார். அதன் தொடர்ச்சியே வட்டுக்கோட்டை தீர்மானமும் பின்னர் இன்றுவரை நீண்டுசெல்லும் அவலங்களும்.

இவர்கள் தமது அதிகாரப்பசிக்காகத் தமிழ் மக்களை நடுத்தெருவில் விடப்போகிறார்கள் என்று 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே எனக்குத் தெரிந்துவிட்டது. அன்று கட்சிக்குள்ளேயே தமிழீழத்திற்கான எல்லைகளை எப்படி நிர்ணயம் செய்வது? வேலியா போடமுடியும் அல்லது சுவரெழுப்புவதா என்றெல்லாம் கேள்விகள் எழும்பியிருந்தன. இத்தனையையும் கண்ணுற்றபின்னும் நான் உயிருடன் இருக்க வேண்டுமா என்று கடவுளை வேண்டியபடியே இருந்தேன். ஒருவழியாக 1977ஆம் ஆண்டு எனது பிரார்த்தனை பலித்துவிட்டது. நான் உங்களின் அரக்கப்பிடியிலிருந்து விடுபட்டுவிட்டேன். எனக்கு கிடைத்த விடுதலையினால்தான் இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினேன்.

ஆனாலும் என்னால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சாத்வீக முயற்சிகளும் சிங்கள பௌத்த மேலாதிக்க தீவிரவாத ஆளும் சக்திகளினால் ஆயுதமுனையில் அடக்கப்பட்டதன் விளைவாக எப்படியாவது ஈழத்தை அடைந்துவிட வேண்டும் என்னும் எண்ணம் எமது இளம்பிள்ளைகளிடம் கருக்கொண்டது. சரி பிழைக்கு அப்பால் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற முடிவிற்கு இளைஞர்கள் வருவதற்கு எம்மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்களே காரணம் என்பதை இன்று ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அறிவிலிகளே அறிவீர்களா?

தங்கள் கண்முன்னே தமது தலைவர்கள் தாக்கப்படுவதை சகிக்க முடியாமலும் சாத்வீகப் போராட்டங்கள்கூட மூர்க்கமான ஆயுதப்படைகளினால் அடக்கப்பட்டதன் விளைவாக இனி சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் இருக்க முடியாது என்ற கள யதார்த்தமுமே ஆயுதப் போராட்டத்தின் மூலம் இறைமையுள்ள தனி அரசை ஸ்தாபிப்பதற்கான முயற்சி என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

பண்டாரநாயகவுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட உடனேயே சிங்கள தலைமைகள் எம்மை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை நான் உணர்ந்திருந்தேனே. நான் மரணிக்கும்வரை என்னுடன் பயணித்த உங்களால் எப்படி இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட முடிகிறது?

தம்பி அமிர்தலிங்கம்கூட மலேசியா சிங்கப்பூர் பிரச்சினையைக் குறிப்பிட்டுக் காட்டி இப்படி ஒரு சில நாடுகள் மட்டுமே இரத்தம் சிந்தாமல் விடுதலை அடைந்துள்ளன. பெரும்பாலான நாடுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே விடுதலை அடைந்துள்ளன என்று கூறியதை மறந்துவிட்டீர்களா?

1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்திற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் என்று கூறினீர்களே இது உங்களது அயோக்கியத்தனம் இல்லையா?

தமிழீழத்தைப் பிரகடனம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட அமைச்சர் பதவிக்கும் மாவட்ட அபிவிருத்தி சபைக்குமான தேர்தல்களில் போட்டியிட்டீர்களே? இதுதான் உங்களது அரசியல் நேர்மையா?

தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு தவிர்ந்த ஏனைய எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடக்கூடாது என்று அன்றைய இளைஞர்கள் வற்புறுத்திய நேரத்தில் மேற்குறித்த தேர்தல்கள் ஈழத்திற்கான குட்டிப் பாராளுமன்றத் தேர்தல்கள் என்று மக்களை ஏமாற்றினீர்களே இதுதான் உங்களது விசுவாசமா?

இவ்வளவும் கடந்த பின்னர், நாம் தூண்டிவிட்ட உணர்ச்சிகளால் உந்தப்பட்ட இளைஞர்கள் எமது கோரிக்கையை சிரமேற்கொண்டு தனிநாட்டை அடைவதற்காக நடத்திய ஆயுதப் போராட்டமும் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் மௌனிக்கச் செய்யப்பட்ட நிலையில், எமது உரிமைக்கான கோரிக்கையை இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்ததே.

எனது கட்சியின் பெயரையும் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தையும் அரசையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்துதானே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டீர்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவற்றில் போட்டியிடும்போதுகூட எமக்கான அபிவிருத்தியை நாமே மேற்கொள்ள இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த ஆணை வழங்குங்கள் என்றுதானே வாக்கு கேட்டீர்கள். அபிவிருத்திக்கான நிதியை எமது புலம்பெயர்ந்த உறவுகளிடமிருந்தும், நட்பு நாடுகளிலிருந்தும் பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கினீர்களே. இவற்றில் எதையாவது நிறைவேற்றினீர்களா?

யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து வரவு-செலவுத் திட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வரவு-செலவு திட்டத்திற்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வருவது ஏன்? வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான நிதியொதுக்கீடு மிகவும் குறைந்தளவில் இருந்தபோதிலும் அவற்றிற்கான நிதியைப் போராடிப் பெறாதது ஏன்?

இறுதி யுத்தம் என்ற போர்வையில் எம்மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையினூடாக நீதிவிசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகளைப் பட்டியலிட முடியுமா?

இலங்கையை சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி, 2015ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கையையும் இணை அனுசரணை வழங்கவைத்து திட்டமிட்டு காலநீட்டிப்பைப் பெற்றுக்கொடுத்துவிட்டு நாடாளுமன்றத்தில் மிரட்டுவதுபோல் நடிப்பதுதான் நீங்கள் என்மீது வைத்திருக்கும் விசுவாசமா?

மக்களால் நிராகரிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக சட்டமூலத்திற்கு எதிராக காலையில் நாடாளுமன்றத்தில் விவாதித்துவிட்டு மாலையில் அந்த சட்டமூலத்திற்காக வாக்களித்ததின் மர்மத்தை விளக்குவீர்களா?

புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டமூலம் பல குழப்பங்களை ஏற்பத்தும் என்று தெரிந்தும் அவசர அவசரமாக அந்தச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தியதன் பின்னணியை விளக்குவீர்களா? தமிழர் தாயகப் பிரதேசங்களில் தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் பிரதிநிதித்துத்தை அதிகரிப்பதுதானே?

இன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களை இழுத்தடிப்பதற்கும் இந்த சட்டம் தானே உங்களுக்குக் கைகொடுக்கிறது. அதாவது மாகாணசபைத் தேர்தல்களில் 50வீதம் வட்டார அடிப்படையிலும் எஞ்சிய 50வீதம் விகிதாசார அடிப்படையிலும் என்ற குழப்பகரமான சட்டம்தானே இன்று உங்களை தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறது.

ஆயுதப் போராட்ட அமைப்பினரின் மீது விரல்நீட்டுவதற்கு உங்களுக்கு ஏதாவது அருகதை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் செய்திருக்கும் செயற்பாடுகள் அவர்கள் ஆயுதப் போராட்டத்தின்போது நடத்திய தவறுகளைவிடவும் பாரதூரமானவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உங்களிடம் கொள்கைப் பற்றும் இல்லை. மிதவாத அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டிய இராஜதந்திர அணுகுமுறையும் இல்லை. ஆனால் கதிரைகளை சூடேற்றி உங்களது வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு என்பெயர்தானா உங்களுக்குக் கிடைத்தது?

அன்று அமிர்தலிங்கமும் நவரட்னமும் முடிவுகளை மேற்கொண்டு ஏனையோரை தலையாட்டி பொம்மைகளாக வைத்திருந்தார்கள். காங்கிரசிலிருந்து வந்திருந்த சிவசிதம்பரம் கூட்டணியின் தலைவர் என்ற பதவியுடன் வாயடைத்து அமிர்தலிங்கத்தின் குரலுக்குப் பின்பாட்டுப் பாடுபவராக மாறினார். இன்று அந்த வேலையை கூட்டமைப்பு என்ற பெயரில் ரெலோவும் புளொட்டும் செய்கின்றனர். அன்று அமிர்தலிங்கம் செய்ததையே இன்று நீங்கள் செய்கின்றீர்கள். அமிரின் இடத்தில் சம்பந்தன் இருக்கிறார். நீலன் திருச்செல்வத்தின் இடத்தில் சுமந்திரன் இருக்கிறார். இரண்டு பேரும் அன்றைப் போலவே இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு வைத்துக்கொண்டு சுபபோகங்களை அனுபவித்துக்கொண்டு என் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளீர்கள்.

பின்னால் வரப்போகிற விடயங்களை அறிந்துதானே இனி நான் உருவாக்கிய தமிழரசுக் கட்சியின் பெயரையோ கொடியையோ இலச்சினையையோ பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி என்னுடன் கொள்கையளவில் முரண்பட்ட ஜிஜியையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி உங்களிடம் கொடுத்துவிட்டு நான் எனது கண்களை மூடினேன். எனது பூத உடலின்மீதுகூட எனது கட்சி கொடி போர்த்தக்கூடாது என்று தெரிவித்திருந்தேனே அப்படி இருந்தும் எனது பெயரையும் எனது கட்சியையும் என்ன அடிப்படையில் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் தொல்லை தாங்க முடியாமல்தானே இறைவன் எனக்கு நோயைக்கொடுத்து தன்னுடன் அழைத்துக்கொண்டான். அதனால்தானே இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் கூறினேன். ஆனால் நீங்கள் என்னை இன்று கல்லறையில்கூட நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என்கிறீர்களே.

இனி தமிழ் மக்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வருவதற்குள் மக்களே இவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். எனக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பார் என்ற அடிப்படையில் திரு சம்பந்தனை அவரது இளமைப்பருவத்தில் நானே அரசியலுக்கு அழைத்துவந்தேன். இன்று அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.

இனியும் இவர்களை நம்புவதில் பயனில்லை. எனவே, இவர்களை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த உறுதியானதும் கொள்கைப் பிடிப்புடையதும் நிதானமாகச் செயற்படுவதும் மக்களுக்கு விசுவாசமாகவும் செயற்படக்கூடிய வலுவானதும் சட்டவலு உள்ளதுமான ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து, அத்தகைய முன்னணியை உருவாக்கி எமது உரிமைக்குரலை சர்வதேச அளவில் எடுத்துரைத்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடும்படி என்னை தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ள எம் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு தீர்வை பெற்று கொடுக்குமா மோடி அரசு?

இலங்கையில் தமிழ் ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்ற காலப்பகுதியில் சில ஆயுத இயக்கங்கள் பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றன. அதேவேளை இலங்கையின் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஜெயவர்த்தன அமெரிக்கவுடன் நெருக்கமாக உறவை பேணி வந்தார். அமெரிக்க உடனான இலங்கையின் உறவும் தமிழ் இளைஞர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பதை கருதிய இந்தியா தமிழ் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கியது.

இந்நிலையில் லிபரேசன் நடவடிக்கை அல்லது வடமராட்சி நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் 1987 ஆம் ஆண்டு மே ஜூன் மாதங்களில், அச்சமயம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை அடைந்த பின்னர் இலங்கை இராணுவம் மேற்கொண்ட முதல் மரபு வழி போர் இதுவாகும்.

இதே வேளை இந்தியா ”ஒபரேசன் பூமாலை” நடவடிக்கை மூலம் யாழ் குடாநாட்டில் இந்திய ஆகாயப் படை வாணூர்திகள் நிவாரண பொருட்களை வீசுவதற்காக நுழைந்த போது இலங்கையின் இறைமையை இந்தியா அப்பட்டமாகவே மீறியது.

இந்தியாவின் இந்த அத்துமீறிய செயலுக்காக சர்வதேசம் இந்திய அரசை கடிந்துகொள்வதா வேண்டாமா என்ற ஒருவித தயக்க நிலையில் இருந்ததையும் , இந்தியா இலங்கை மீது படைபிரயோகத்திலும் ஈடுபடும் என்கின்ற செய்தியையும் இலங்கை நன்கு புரிந்துகொண்டமையாலேயே ஜே.ஆர். ஜெயவர்த்தனா ராஜிவ் காந்தி கூறுவதை ஏறுக்கொண்டார்.

ராஜிவின் இந்த இந்திய ஏகாதிபத்திய அபிலாசையால் அன்று ஒரு நன்மை ஈழத்தமிழருக்கு ஏற்பட்டது. ”ஒபரேசன் லிபரேசன்” ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு தமிழர்களுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதை தவிற வேறு எந்த ஒருவழியையும் ஜெயவர்த்தனாவுக்கு ராஜிவ் காந்தி விட்டு வைக்கவில்லை.

இந்த சந்தர்ப்பமே தமிழர்கள் ராஜிவ் காந்தியை பயன்படுத்த்திக்கொள்ள தவறிய சந்தர்ப்பமாகும்.அன்று விடுதலை புலிகள் அமைப்பு தனி ஈழ அரசை நிறுவ நோக்கில் செயற்பட்டதால் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. அதன் பின்னர் இந்திய படைகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது

இதில் பல தமிழ் மக்கள் கொல்லபட்டனர்.பல பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சூறையாடப்பட்டது அத்தோடு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இந்தியா இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ராஜீவ் காந்தி இந்தியாவின் ஸ்ரீ பெரும்புதூர் என்னும் இடத்தில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார்

இந்நிலையில் முள்ளிவைக்காலில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியா எனது நாட்டிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டது.

தமிழ் மக்கள் ஒருவிடயத்தை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். 1987ம் ஆண்டின் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா கற்றுக்கொண்ட பாடங்கள் பல. இவ்ஒப்பந்தத்தின் பின்னரான காலத்தில் இந்தியா நேரடியாக இலங்கையின் தீர்வு விடயத்தில் தலையிடுவதில்லை

தமிழ் மக்களின் நலனில் மோடி அக்கறை கொண்டிருப்பின் கடந்த கால மோடிஅரசு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்று கொடுத்திருக்கும்.

மோடியின் இலங்கை பயணதின் பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு மோடி சந்தித்தது இதன் பொழுது தமிழர்களால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்தவிதமான தாக்கமும் ஏற்படுத்தாது என்பதை கருதிய மோடி தமிழ் தேசிய கூட்டமைப்புபின் தீர்வு விடயத்தை பெரிய விடயமாக கருதாது இந்தியா வாருங்கள் பேசுவோம் என மோடி தட்டிக் கழித்தமையே நிதர்சனமான உண்மை

இந்த விடயத்தை புரிந்து கொள்ளத கூட்டமைப்பு மோடி இந்தியா அழைக்கிறார் தீர்வு தர என தமிழ் மக்களை ஏமாற்ற முற்பட்டது. இந்த போலி வேடம் கலைந்ததால் மீண்டும் மோடிக்கு ஈழ தமிழரின் தீர்வு விடயத்தில் அக்கறை இல்லை என ஓலமிட ஆரம்பித்துள்ளார்கள்.

கஜேந்திரகுமாருக்காக காத்திருக்காமல் விக்கினேஸ்வரன் காத்திரமான முடிவை எடுக்வேண்டும்...

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கு மாற்றுத் தலமை அவசிய தேவையாக உள்ள சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் கட்சிகளின் கூட்டு மிக முக்கியமாக காணப்படுகிறது. அந்தவகையில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலமையிலான ஒரு மாற்று அணியையே தற்போது மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு ஓர் கருத்தை வெளியிட்டு இருந்தார். விக்கினேஸ்வரன் அவர்கள் E.P.R.L.F கட்சியை விட்டு தங்களுடன் வந்தால் தாங்கள் விக்கினேஸ்வரனுடன் இணைந்து பயணிப்போம் என கூறியிருந்தார்.

தமிழ் மக்கள் மாற்று தலமையொன்றை எதிர்பார்த்திருந்த நேரத்தில் இவரின் இவ்வாறான கருத்து மக்களிடையே சலசலப்பபை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசியத்தின்பால் நிற்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார் இவரின் அழைப்பை உதாசீனப்படுத்துவது போன்றே கஜேந்திரகுமாரின் கருத்து அமைந்திருந்தது.

நீதியின் குரலாக இருக்கின்ற விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கவேண்டும் என்பதற்காக பல சதித்திட்டங்களை வகுத்து வருகின்றார் அதன் செயற்பாடகத்தான் விக்கினேஸ்வரன் இந்தியாவின் ஆள் எனவும் சுயுறு எனவும் பகிரங்கமாக அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இவருடைய ஒருநாடு இருதேசம் என்கின்ற கொள்கை கடந்த பத்துவருடங்களாக மக்கள் நிராகரித்துவருகின்றமை யாவரும் அறிந்ததே. உள்ளுராட்சி தேர்தல் கேட்கமாட்டேன் மாகாண சபை தேர்தல் கேட்கமாட்டேன் என வீரவசனம் பேசிய இவர் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்காக இவருடைய தீவிர விசுவாசியான சட்டத்தரணி ஒருவரை அனுப்பி டக்ளஸ்தேவானந்தாவிடம் டீல் பேசியிருந்தார்.

இவர் டீல் பேசியதற்குரிய ஆதாரத்தை தக்க தருணத்தில் வெளியிடுவதாக டக்ளஸ்தேவானந்தா அண்மையில் தெரிவித்திருந்தார். இவர் தனியொருவராக பாராளுமன்றம் சென்று எதை சாதிக்கமுடியும் எனகருதுகிறார் என்று தெரியவில்லை. இவ்வாறக இவரின் முன்னுக்கு பின் முரணான கருத்தை பார்க்கின்றபோது இவர் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு செயற்படுகின்றார் என்ற சந்தேகம் வலுக்கின்றது.

மக்கள் ஓரு மாற்றுக் கட்சியை விரும்பவில்லை மாற்றுக் கட்சிகளின் கூட்டைத்தான் விரும்புகின்றார்கள் இனியும் இவருக்காக காத்திருக்காமல் தமிழ் மக்களிற்குரிய தீர்வை முன்னிறுத்தி பயணிக்கும் அரசியல்கட்சிகள் அமைப்புக்கள் புத்திஜீவிகள் என்பவற்றை ஒன்றிணைத்து பலமான மாற்று தலமை ஒன்றை அமைக்க விக்கினேஸ்வரன் முன்வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது

கேட்டது சமஷ்டி பெற்றது கம்பரலியா
இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா?

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீதிகளும் அவசியமில்லை.

எம்மை நாமே ஆள்வதற்கான உரிமையே வேண்டும்” என்று முழங்கினர்.
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல் பிரச்சார மேடைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் “எமக்கு அபிவிருத்தி முக்கியமல்ல.

நாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். எமக்கு உள்ள சுயநிர்ணய உரிமை உரித்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை நான் எனக்கு உள்ள வெளித்தொடர்புகளைப் பயன்படுத்தி நிதியைப் பெற்று மேற்கொள்வேன். ஆனால் நாம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் எம்மை கூர்ந்து அவதானிக்கிறது. கடந்த அரசாங்கம் எமக்குச் செய்த கொடுமைகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். சர்வதேச சமூகத்தின் அந்த தார்மீக கடமையை வலியுறுத்துவதற்கு நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்ற செய்தியை நீங்கள் உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அந்தக் கர்மத்தை நிறைவேற்ற முடியும். அதற்கான ஆணையை வழங்கும்படிதான் நான் உங்களிடம் வினயமாகக் கேட்கிறேன். அபிவிருத்தியை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்” என்று தொடர்ந்து கூறிவந்தார்.

தமிழரசுக் கட்சியின் ஆரம்ப நாட்களிலும் சரி, அது தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சி என்று பல பரிணாமங்களை அடைந்தபோதும் சரி அது ஒருபோதும் அபிவிருத்தி அரசியலை மேற்கொள்ளப்போவதாகக் கூறவில்லை. ஆனால் இன்று தனது கையாலாகாத் தனத்தையும் தன்னுடைய அரசியல் வங்குரோத்துத் தனத்தையும் மூடிமறைப்பதற்காக இணக்க அரசியல், அபிவிருத்தி அரசியல் என்ற போர்வைகளைப் போர்த்திக்கொண்டு மக்கள் முன் உலாவர முயற்சிக்கின்றது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் முதல் மூன்றாண்டுகள் அதாவது 2012ஆம் ஆண்டுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தராஜபக்சவிற்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதுபோல் நடித்தது. அந்த நாடகம் திருவாளர் சுமந்திரன் மகிந்தவுடன் கிரிக்கெட் விளையாடியதுடன் அம்பலமானது. இலங்கையின் தேசியக் கொடி இலங்கையர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்று கூறி தந்தை செல்வாவே ஏற்க மறுத்த அந்தக் கொடியை 2012ஆம் ஆண்டின் மேதினத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டதன் மூலம் ரணிலின் மூலமாக தென்னிலங்கை அரசியல் சமூகத்துடன் ஒரு இணக்க அரசியலுக்குச் செல்வதற்கு தயாராகிவிட்டதையும் தமிழ்த் தேசிய இனத்தை தனது சுயலாபங்களுக்காகக் காட்டிக்கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதையும் கோடிட்டுக் காட்டியது.

ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக 2014ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் எதுவித நிபந்தனையும் விதிக்காமல் உழைத்து 2015ஆம் ஆண்டு துவக்கத்தில் மைத்திரியை ஜனாதிபதியாக்கி, ரணிலை பிரதமராக்கி அழகு பார்த்தார் திருவாளர் சம்பந்தன். தமிழர்களை அரசியல் அநாதைகளாக நடுத்தெருவில் விடுவதற்கும் மீண்டும் மீண்டும் அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொள்வதற்குமாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுமத்திற்கு அவ்வப்போது அரசாங்கத்தால் சன்மானம் வழங்கப்பட்டு அவர்களின் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

வாங்கியதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவோ அல்லது சன்மானத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவோ தமிழரசுக் கட்சியும் நிபந்தனை அற்ற ஆதரவினை அரசாங்கத்திற்கு அதன் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் வழங்கி வருகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் வெற்றியடைவதற்கு உறுதிபூண்டு செயற்பட்டிருந்தது.

எதிர்க்கட்சியில் இருப்பதால் எதிர்ப்பதுபோல் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களை முன்னெடுத்து, இறுதியில் அவற்றை ஆதரித்து வாக்களித்து, அரசாங்கத்திற்கும் மக்கள் விரோத வரவு-செலவுத் திட்டத்திற்கும் தமது ஆதரவினை வழங்கி தமிழ் மக்களின் ஆணையைப் புறந்தள்ளியது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உப்புச்சப்பற்ற காரணங்களைக் கூறி வரவு-செலவுத் திட்டம் நிறைவேற தனது பரிபூரண ஆதரவினை வழங்கியிருந்தது.

ஒருபுறம் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டுக்கொண்டு மறுபுறம் அந்த இராணுவம் வடக்கில் நிலைகொள்வதற்கு இடமளிக்கும் வகையில் பாதுகாப்புச் செலவினங்களுக்குக் கூடுதல் நிதியொதுக்கீடு செய்யப்பட்டமைக்கு ஆதரவையும் வழங்கி வந்துள்ளது. யுத்தம் இல்லாத ஒரு சூழலில் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பயன்படுத்தி பாதுகாப்பிற்கான நிதியொதுக்கீட்டை குறைப்பதற்குக்கூட அழுத்தம் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் தீர்வு வரப்போகிறது. அதற்கு இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும். அரசாங்கம் கொண்டு வருகின்ற பிரேரணைகள் அனைத்தும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடைய வேண்டும். அப்பொழுதுதான் எமது பிரச்சினைக்குத் தீர்வைக்கொண்டுவரும் புதிய அரசியல் யாப்பும் வெற்றி பெறும் என்று குழந்தைத் தனமான காரணத்தைச் சொல்லியிருந்தார்.

அதற்காகவே அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவினையும் வழங்கியிருந்தார்.
ஆனால் இன்று நாளாந்த பிரச்சினை முதல் அரசியல் தீர்வு வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காத நிலைமையிலேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

2016ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்கையில் புதிய அரசாங்கம் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று காரணம் கூறப்பட்டது. 2017ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு 2015ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் தீர்வு வரைபு விரைவில் வரவுள்ளது என்றும் தெரிவித்து ஆதரவளிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கு நிதியொதுக்கப்பட்டமையைக் காரணம் காட்டியது. இந்த நேரத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலும் நெருங்கியதால் தமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் குறிப்பாக அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆதரித்தவர்களுக்கும் சிறப்பு நிதியொதுக்கீடாக இரண்டரை கோடியைப் பெற்றுக்கொடுத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளச் செய்து மிகவும் மோசமான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவினைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் முரண்டுபிடித்துக்கொண்டிருந்த நிலையில் நாட்டில் திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அரங்கேற்றப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் அரசாங்கத்தைக் காப்பதற்காக ரணிலுடன் கைகோர்த்து வரவு-செலவு திட்டத்தை இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டிய நிலைய ஏற்படுத்தியிருந்தது. இதற்கு கைமாறாக கம்பரெலிய என்னும் கிராம எழுச்சித் திட்டத்தினூடாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 40 கோடி ரூபாய்க்கு திட்டங்களை முன்மொழிவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதியை முறையாகச் செலவழிக்கத் தெரியாமல் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழி பிதுங்கி நின்றதைக் காணமுடிந்தது.
தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்ட நிலையில் பிரிட்டிஷாரிடம் இழந்துபோன எமது தேசிய இறைமையை மீண்டும் வென்றெடுக்கப் போகிறோம் என்று புறப்பட்டு அதற்காகவே கட்சிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்துவிட்டு இன்று அபிவிருத்தி என்ற போர்வையில் மத்திய அரசு வீசும் எலும்புத்துண்டுகளுக்குப் பின்னால் சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையை கிடப்பில் போட்டுவிட்டு ஓடும் பிரதிநிதிகளை என்னவென்று சொல்வது?
அண்மையில் இடம்பெற்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் ரணிலின் அரசாங்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பதற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சர்வதேச நெருக்கடிகளுக்குள் சிக்கிவிடாமல் தடுப்பதற்கும் வடக்கு-கிழக்கிற்கான சிறப்பு நிதியொதுக்கீடு என்ற போர்வையில் பனை அபிவிருத்தி நிதியம் என்ற பெயரில் சுமார் ஐநூறுகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதன் முதற்பகுதியாக திறைசேரியினூடாக 250கோடி ரூபாய் திரு சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டதாக படம் காட்டப்பட்டது.

அபிவிருத்திக்காக வாங்கிய பணத்தை குறைந்தபட்சம் ஒரு சிறப்பு அனுமதியினூடாக சில தொழிற்சாலைகளை நிறுவுவதற்காகவாவது பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இவர்கள் அரசாங்கம் போடவேண்டிய வீதிகளைப் புனரமைப்பதற்கும் சில பொதுநோக்கு மண்டபங்களையும் நூலகங்களை நிர்மாணிப்பதற்கும், விளையாட்டுக் கழகங்களுக்கு உதவுவதற்கும் இந்த நிதியை அவரவர் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்காக வழங்கியுள்ளனர்.

மாகாணத்திற்கு அதிக அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்து மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அந்த மாகாண அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு உழைப்பதற்குப் பதிலாக ஏற்கனவே ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் வடக்கு-கிழக்கில் தமது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் மேற்கொண்ட அதே அபிவிருத்திப் பணிகளை தேசிய இன விடுதலையை வென்றெடுப்பதாகக் கூறித்திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கி தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளாலேயே தமிழ் மக்களின் கண்கள் குருடாக்கப்படுகின்றன.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சர்வதேச மயப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும் உள்நாட்டு அரசியலுக்குள் சிக்கவைத்து, இன விடுதலையை மலினப்படுத்திவிட்டார் திருவாளர் சம்பந்தன்.
இலங்கை அரசாங்கம் ஐ.நாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை அதனால் அதனை எமது கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவதற்காக நாம் இலங்கையில் முகாமிடப்போகிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக, சர்வதேச சமூகங்கள் இலங்கையில் மத அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது.

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்து மகாசமுத்திரம் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கடற்பாதுகாப்பு பாதிப்படைந்துள்ளது என்ற காரணங்களை முன்வைத்து இலங்கையில் முகாமிட்டுள்ளன. இதன் மூலம் அவை தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கைவிடத் தீர்மானித்துள்ளனவோ என்ற சந்தேகம் எழுகின்றது.

திருவாளர் சம்பந்தன் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களும் ஆலோசனைகளும்கூட காரணமாக இருந்தன. சர்வதேச சமூகம் சொல்லியபடியெல்லாம் ஆடிய சம்பந்தன் இப்பொழுதாவது அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கோரவேண்டும். இது அவரது தார்மீக கடமையாகும்.
இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியிருப்பதில் பயனில்லை.

எனவே காலம் தாழ்த்தாமல் மக்களின் நாளாந்த பிரச்சினைகளையாவது முன்னிறுத்தி தமிழ் மக்கள் பேரவை மக்களை அணிதிரட்டி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டுவதற்கு முன்வரவேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் நிர்க்கதியாக்கப்படுவார்கள் என்பதும் இந்த நாட்டில் அவர்கள் சம அந்தஸ்துடைய பிரஜைகளாக வாழ முடியாத நிலை ஏற்படுவதுடன் தமது அடையாளத்தையும் தொலைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தமி;ழ் மக்கள் பேரவையினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் ஆணையை மீறிச் செயற்பட முற்படுவதாகக் கருதியே அதற்கும் சர்வதேச சமூகத்தின் கடமையையும் பொறுப்பையும் நினைவுபடுத்துவதற்குமே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றதாக அதன் ஆரம்ப நிகழ்வுகளில் கூறப்பட்டது. இதற்காகவே வடக்கிலும்-கிழக்கிலும் எழுக தமிழ் என்னும் பெயரில் பாரிய மக்கள் பேரணிகளும் நடாத்தப்பட்டன. அதனால் தமிழ் மக்களுக்கு உரிய தலைமையை வழங்குவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான கொள்கை அடிப்படையிலும் சர்வதேச ரீதியில் நண்பர்கள் யார் எதிரிகள் யார் பகைவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அதனடிப்படையில் உறவுகளைத் தீர்மானிக்கிற சக்திகளையும் ஓரணியில் திரட்டி தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் பொறுப்பிலிருந்து இனியும் பேரவை விலகியிருக்க முடியாது.

மதவாத அரசியல் செய்யும் சாள்ஸ் நிர்மலநாதன்!!

மன்னார் மாவட்டத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பற்றிய அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது மன்னார் மாவட்டத்தின் அரசியல் நிலவரம் என்ன என்பதை சற்று நாம் பார்போமானால் இனவாதத்தின், மதவாதத்தின் உச்ச நிலை மேலோங்கி மிகப்பெரிய கலவரம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இவ் சூழ்ச்சியின் பின்னனியில் செயல் படுபவர் யார்? என்று பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் என்பவரே காணப்படுகின்றார்.

இவர் எப்போது பாராளுமன்றம் சென்றாரோ அப்போது முதல் இன்று வரை மதவாதம் உச்ச நிலையடைந்ததை நாம் கண்கூடாக காணலாம் யார் இந்த சாள்ஸ் நிர்மலநாதன் ? மன்னார் மாவட்டத்தை சேர்ந்திராத இவர். தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மன்னார் மாவட்டத்தின் வருவாய்த்துறைவங்கி பொறுப்பாளராக செயல்ப்பட்டவர் யுத்த காலத்தில் மீனவ சமூதாயத்தில் வசூலீக்கப்பட்ட வரி பணம் மற்றும் சகல கணக்குகளும் இவரிடமே காணப்பட்டது.

2009ல் மே 17ல் யுத்தம் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் இவரிடம் காணப்பட்ட. மக்களின் வரி பணம் முழுவதும் இவர் தனக்கே சொந்தமாக்கிக் கொண்டார். இப்பணத்தைக் கொண்டு இவர் புதிய தொரு எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றை இவர் உருவாக்கினார்.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் பினாமி பெயரில் கொழும்பில் வெள்ளவத்தையில் சொகுசு வீடு ஒன்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். மீதி பணத்தில் சிறு தொகையை வைத்து முதல் தடவையாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் அரசியலில் முதல் தடவையாக மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக் கொண்டார்.

எப்படியாவது அடுத்து வரும் தேர்தலில் வெற்றியீட்டியே ஆக வேண்டும் என்ற சபதத்துடன் தன்னிடம் உள்ள வரி பணத்தில் முன்பைவிட இன்னும் அதிகமாக பாராளுமன்ற தேர்தல் ஆரம்பமாகும் முன்பே பணத்தை செலவு செய்து இனவாத மதவாத்தை விதைத்து இறுதியாக நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார்.

அன்று தொடக்கம் இன்று வரை இனவாதம் மதவாதம் பேசி தனது அரசியல் வாழ்க்கையை நிலை நாட்டுவதே இவரது குறிக்கோளாக அமைந்துள்ளது. இவரின் இவ்வாறான செயற்பாடு மூலம் மன்னார் மாவாட்ட மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதுடன் எதிர் வரும் காலங்களில் இவருக்கெதிரான போரட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி...தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றி இவ் இடத்தில் எழுதும்போதெல்லாம் நீங்கள் கூட்டமைப்புக்கு எதிரா? என்று யாரேனும் கேட்டு விடுவீர்களோ என்ற மனக் கிலோசம் எம்மிடம் இருக்கவே செய்கிறது

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.
ஆனால் அவர்களின் செயற்பாடு தமிழினத்துக்கு விரோதமாக இருக்கிறது என்பதுதான் எமக்கு மிகுந்த வேதனையையும் விரக்தியையும் தருகிறது.

இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டுள்ள நுட்பத்தை நாம் யதார்த்தமாகக் கண்டுள்ளோம் அவ்வாறான ஓர் ஒற்றுமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏற்படுத்த முடியுமா என்ன? இதுதவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை நடவடிக்கைகளும் தமிழினத்துக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதாக இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

ஐ.நா மனரித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறியது முதல் சர்வதேச விசாரைனை முடிந்து விட்டது என்று கூறியது வரையிலும் அரசாங்கத்துக்கான ஆதரவின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்கள் விவகாரம் காணி சுவீகரிப்பு என்பன தொடர்பில் நிபந்தனை விதிக்கத் தவறியமை வரையில் எல்லாமும் தவறானவையாகவே இருக்கின்றன.

இதற்கு மேலாக ஜனாதிபதி மைத்திரியை ஆதரித்தது எங்கள் தவறு வடக்கு முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைக் கொண்டு வந்தது நாங்கள் விட்ட தவறு எனத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறுகின்ற கருத்துக்களும் அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் தமிழ் மக்களுக்குக் கேடு செய்வதாகும்.

இவைதான் என்றால் இந்தியாவுக்குச் சென்ற மாவை சேனாதிராசா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளார், இந்தச் சந்திப்பு இப்போது அவசரமா என்றால் இல்லவே இல்லை இந்திய மத்திய அரசை மீண்டும் தனதாக்கிக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி,மு.கா. ஸ்டாலினுடன் கடுமையான எதிர்ப்பைக் கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலில் இருக்கக்கூடிய ஸ்டாலினை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சந்தித்தது ஆரோக்கியமானதல்ல என்பதே நம் கருத்து.

முன்னர் ஒருமுறை கலைஞர் கருணாநிதியின் ஆதரவுடன் பிரதமர் மன்மோகன்சிங் மத்தியில் ஆட்சி அமைத்திருக்க, கருணாநிதிக்கு எதிராக இருந்த வை.கோபாலசாமியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தது.இச்சந்திப்பால் ஆத்திரமடைந்த கலைஞர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தவிருந்த சந்திப்பை தடுத்து நிறுத்தினார்.இந்த அனுபவங்கள் இருந்தும் மாவை சேனாதிராசா இப்போது மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் காரணமாக கொழும்பில் பிரதமர் மோடியுடன் கூட்டமைப்பு நடத்தவுள்ள சந்திப்பை பலவீனமாக்கும் என்பது, மறுக்க முடியாத உண்மை. ஆக இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடும் வேலையில் கூட்டமைப்பு இப்போது இறங்கியுள்ளது என்பதுதான் உன்மை.