ஒற்றன்..!

February 2024

காரைநகரில் உற்பத்தியான படகினால்  தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

தென்னிலங்கையைச் சேர்ந்த படகுக் கட்டுமானக் கம்பனி ஒன்றினால் காரைநகரில் உற்பத்தி செய்யப்பட்ட சொகுசுப் படகு பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளமை யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் விடயம் என சமூக வலைத்தளங்கள் முழங்கித்தள்ளுகின்றன.

யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் நிலையில் தென்னிலங்கைச் சிங்களக் கம்பனி ஒன்று,

சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு படகை உற்பத்தி செய்த விடயம் மறைமுகச் செய்தியாக மூடி மறைக்கப்பட்டு, வேலைகள் முடிவடைய முன்னரே மிதக்கும் சொகுசுப்படகு பற்றிய தகவல்கள் கசியவிடப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாணம் காரைநகரில் நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட வடகடல் நிறுவனத்தின் சீநோர் தொழிற்சாலை உள்ளது. 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சாலையில் கண்ணாடி இழைப் படகுகள், கடற்றொழில் நடவடிக்கைக்கான படகுகள், வலைகள் போன்றன உற்பத்தி செய்யப்பட்டன.

வடக்கு – கிழக்கு மட்டுமன்றி இலங்கையின் பல இடங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இங்கு உற்பத்திப் பொருட்களைப் பெற்றுவந்தனர்.

காரைநகர் உட்பட யாழ்.மாவட்டத்தின் பல இடங்களையும் சேர்ந்த பல்துறை சார்ந்த பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இங்கு தொழில் செய்தனர். தமிழர் பிரதேசத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி இத்தொழிற்சாலை இயக்கப்பட்டது.

இங்கு பணியாற்றிய பலர் இன்றும் இதன் நினைவுகளைப் பேசிக்கொண்டிருக்கின்றனர். தாம் இறப்பதற்கு முன்னர் காரைநகர் சீநோர் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதைக் கண்குளிரப் பார்க்கவேண்டும் என இங்கு பணியாற்றிய பல முதியவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் நோர்வே நாட்டின் பல மில்லியன் ரூபா நிதியுடன் இலங்கை அரசும் குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கி இத்தொழிற்சாiயைப் புனரமைத்துள்ளன. புனரமைப்பு என்பதற்கு பதிலாக, இடிந்து அழிந்துபோன இத்தொழிற்சாலை மீளக்கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்பதே சரியானது.

இத்தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டு 8 வருடங்களுக்கு மேலாகின்ற போதிலும் இதுவரை இதை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் அவ்வப்போது இங்கு வந்து பார்வையிடுவதும் விரைவில் திறக்கப்படும் என அறிக்கை விடுவதும் அடிக்கடி நடைபெறும் அதிசயங்களாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அமைச்சர் டக்களஸ் தேவானந்;;தா ஆகியோர் இங்கு வந்து பார்வையிட்டு உறுதிமொழி வழங்கியோர் ஆவர்.

நிலமை இவ்வாறிருக்க, யாழ்ப்பாணம் காரைநகரில் உற்பத்தி செய்யப்பட்ட சொகுசுப் படகு ஒன்று பங்களாதேஷ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது எனவும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறானதொரு படகுத் தொழிற்சாலை இருப்பது தமிழ் மக்களுக்கு பெருமையான விடயம் எனவும் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இச்செய்தியைப் பார்த்து உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழர்கள் பலர் காரைநகர் சீநோர் தொழிற்சாலை இயங்கத் தொடங்கிவிட்டது என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. தென்னிலங்கையில் உள்ள கம்பனி ஒன்றினாலேயே இப்படகு கட்டப்பட்டதாகும்.

தென்னிலங்கையில், யப்பான் நாட்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மகாசென் மரீன் என்ற நிறுவனம் சூரிய மின்கலத்தில் இயங்கும் படகுகளை வடிவமைத்து உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது. இதன் தலைமைச் செயலகம் மகரகமவிலும் இதன் பிரதான தொழிற்சாலை கம்பஹாவிலும் இயங்குகின்றன.

மேற்படி நிறுவனம் காரைநகரில் உள்ள சீனோர் தொழிற்சாலையை வாடகைக்கு பெற்று இங்கு படகு கட்டுமானத் தொழிலைச் செய்து வருகின்றது. அவர்களால் இங்கு உருவாக்கப்பட்ட முதலாவது படகுதான் பங்களாதேஷ் நாட்டிற்கு விற்கப்படவுள்ளது.

இப்படகின் வடிவம் பலரையும் ஈர்த்துள்ளது. ஆனால், இந்த நிறுவனத்தின் முதலாவது படகு இதுவன்று. கம்பஹாவில் உள்ள தொழிற்சாலையில் இந்நிறுவனம் இதேபோன்ற பல படகுகளை முன்னரே உற்பத்தி செய்து விற்பனை செய்திருக்கின்றது.

இயங்காமல் இருக்கும் சீநோர் தொழிற்சாலையை வாடகைக்கு பெற்று தொழில் நடவடிக்கையை மேற்கொள்வது சரி. ஆனால், காரைநகர் உட்பட யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்ற நிலையில், இக்கம்பனி இவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கினால் அது வரவேற்கத்தக்கது.

முப்பது வருட யுத்தம் காரணமாக தமிழர் தாயகம் இன்று கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், இங்குள்ள தொழிற்சாலைகளை இயக்கி தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கினால் மட்டுமே தமிழர் தேசத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்த முடியும்.

மாறாக, தமிழர் தாயகத்தில் உள்ள வளங்களை தென்னிலங்கைக் கம்பனிகள் சுரண்டி இலாபமீட்டுவதானது தமிழர்களின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கப்போவதில்லை.

யுத்தத்திற்கு முன்னர் யாழ். காரைநகரிலும் குருநகரிலும் சீநோர் தொழிற்சாலைகள், காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, ஆனையிறவு உப்பளம் போன்ற பல பொருளாதார நிலையங்கள் சிறப்பாக இயங்கின.

இதன் மூலம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டனர்.

யுத்தம் தீவிரம் பெற்ற பின்னர் இத்தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. யுத்தத்தால் இத் தொழிற்சாலைகளும் அழிந்து போயின. தற்போது ஆனையிறவு உப்பளம் மட்டும் அரசியல் ஆதாயத்துடன் ஓரளவு இயக்கப்படுகின்றது.

2009 யுத்தம் முடிந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள் நல்லிணக்கம் பேசுகின்றனவே தவிர தமிழர் தாயகத்தில் உள்ள தொழிற்சாலைகளை இயக்குவதில் கவனம் செலுத்தவில்லை. ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் தங்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை தள்ளிவிடுகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே பல மில்லியன் ரூபா செலவில் மீளக்கட்டியெழுப்பப்பட்ட காரைநகர் சீநோர் தொழிற்சாலை இன்று தென்னிலங்ககைக் கம்பனி ஒன்றின் வசமாகி சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

சரி இத் இத்தொழிற்சாலை காரைநகரில் இயங்குவதால் காரைநகர் பிரதேச சபைக்கு வரி வருமானம் கிடைக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. மத்திய அரசின் கம்பனிகள் சட்டத்தின் கீழ் சீநோர் தொழிற்சாலை பதிவுசெய்யப்பட்டிருப்பதால் மத்திய அரசாங்கமே இதை நிர்வகிக்கும் எனவும் தமக்கு எந்தவிதத்திலும் இதனுடன் தொடர்பு இல்லை எனவும் காரைநகர் பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

ஆக, தமிழர்களுக்கு ஒரு சதத்திற்கேனும் நன்மை பயக்காத தென்னிலங்கைக் கம்பனி ஒன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட படகு ஒன்றினால் தமிழர்களுக்கு பெருமை என எண்ணுவதும் அறிக்கையிடுவதும் பொருத்தமானது அல்ல. காரைநகர் சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகக்கூடிய வாய்ப்பே அதிகமாகும்.

இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் முக்கிய கரிசனை செலுத்தவேண்டும். குறிப்பாக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுத்தால் காரைநகர் மற்றும் குருநகர் சீநோர் தொழிற்சாலைகளை இயக்க முடியும். இதன்மூலம் தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக சீரமைக்கலாம்.

என்.பிருந்தாபன்
(ஊடகப் பணியாளர்)