இலங்கைத்தீவில் நிலையான தீர்வுகள் எட்டப்படும் வரை தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும் ! ஜனநாயக போராளிகள் கட்சி

ஆசிரியர் - Admin
இலங்கைத்தீவில் நிலையான தீர்வுகள் எட்டப்படும் வரை தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும் ! ஜனநாயக போராளிகள் கட்சி

ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான முதன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப் ஆகியோருக்கும் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன் போது யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரான போராளிகளது பாதுகாப்பு, சமூக பொருளாதார செயற்பாடுகள், சமூகநிலை, தாயக அரசியல், களத்தில் போராளிகளது வகிபாகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

தொடர்சியாக இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் புதிய முறையிலான நில ஆக்கிரமிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்பு கூறலில் காணப்படுகின்ற அசமந்தப்போக்கு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதி மொழிகளின் வழி செயற்படாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் புலனாய்வுத்துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் காத்திரமாக பணியாற்றுவதிலிருந்து விலகி ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தும் செயற்பாடே போராளிகள் மீதான தற்போதைய கெடுபிடிகளுக்கு காரணம் என எம்மால் எடுத்துரைக்கப்பட்டது.

பாரிய இன அழிப்பிலிருந்து மீண்டு வருகின்ற தமிழினம் தற்போதும் மிகவும் நுண்ணியமான முறையில் பெண்களை தலைமையாக கொண்டுள்ள குடும்பங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற நுண்நிதி கடன்கள் மூலம் தற்கொலை மன உளைச்சல் பகுதி பகுதியாக நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதிலிருந்து இனம் மீட்சி பெற பன்னாட்டு உதவிகள் வழங்கப்பட வேண்டிய தேவை உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

யுத்த காலத்திலும் அதற்கு பின்னரும் புலம் பெயர்ந்த எம் உறவுகளுக்கு வதிவிடம் வழங்கி அவர்களது மொழி, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பில் கரிசனை செலுத்திய சுவிட்சர்லாந்து அரசுக்கு போராளிகள் சார்பிலும், மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதே போன்று இனிவரும் காலங்களில் இலங்கைத்தீவில் நிலையான தீர்வுகள் எட்டப்படும் வரை தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும் கோரப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு