SuperTopAds

அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

ஆசிரியர் - Editor III
அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு  வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு


இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற  தேர்தல்  நாளை இடம்பெறவுள்ள  நிலையில்  தேர்தலுக்காக அம்பாறை  மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான  அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில்   இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று   ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தில்  உள்ளுராட்சி மன்ற   தேர்தலுக்காக  19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக    4,78000  வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்..2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற  தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 19 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும்.இவ்வாறு உரிய இடங்களில் எண்ணப்பட்டு அப்பகுதிக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தெரிவிக்கப்படும்.பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள்  குறித்து  உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார். தொடர்ந்து வாக்குகள் உள்ளிட்ட சகல ஆவணங்களும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்திற்கு எடுத்து வரப்படும்.பின்னர் உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.


 இதேவேளை  தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது.

அம்பாறை  மாவட்டத்தில்  தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான  சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.வாக்களிப்பு நிலையத்தில்   காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது என  மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான   சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார் .


இதே வேளை  உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வாக்குச் சாவடிப் பொறுப்பதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஓரளவுக்கு கண்பார்வை மங்கிய அல்லது கண்பார்வையற்ற நபர்கள் தங்கள் வாக்குகளை சுயமாக செலுத்தும் வகையில் வாக்குச்சீட்டின் மீது தொட்டுணரக்கூடிய ஸ்டென்சில் சட்டகம் ஒன்றைப் பயன்படுத்தும் வசதி அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் போன்ற கருவிகளின் துணையுடன் வரும் நபர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் இலகுவாகப் பிரவேசிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் வருகை தரும் நபர்கள் மற்றும் உயரம் குறைந்தவர்கள் இலகுவாக வாக்களிக்கும் வகையில் வாக்குப் பெட்டியை குறைவான உயரத்தில் வைக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பார்வைக்குறைபாடு கொண்டவர்கள் கண்ணாடி அல்லது லென்ஸ் பயன்படுத்தி வாக்களிக்க விரும்பினால் அதற்கும் வசதி செய்து கொடுக்குமாறும் குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையானது வாக்களிப்பவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளும் படியும் வாக்குச் சாவடி பொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.