பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம்- கல்வி அமைச்சு அறிக்கை!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணத்துக்கான காரணம் பகிடிவதை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மாணவரின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையைப் பெற்ற பிறகு, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணைந்து தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஊடகங்களில் பரவி வரும் பகிடிவதை குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளில் அது நிரூபிக்கப்பட்டால், பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் இருந்து வீடு திரும்பிய பின்னர், ஏப்ரல் 29 அன்று கம்பளையிலுள்ள தனது வீட்டில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவர் சந்தித்த தாங்க முடியாத அவமானமே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.