SuperTopAds

காணி சுவீகரிப்பை நிறுத்தாவிடின் யாழ்ப்பாணத்தில் அனுர கால் வைக்க முடியாது!

ஆசிரியர் - Admin
காணி சுவீகரிப்பை நிறுத்தாவிடின் யாழ்ப்பாணத்தில் அனுர கால் வைக்க முடியாது!

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.     

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொழிலாளர்களிற்காக அன்று முதல் இன்றுவரை இந் நாட்டில் செயற்படுகின்ற ஒரே கட்சி தமிழ் அரசுக் கட்சி தான். தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நம்பிக்கையை பெற்ற பிரதான கட்சியும் எமது கட்சி தான்.

இப்படியாக உழைக்கும் தொழிலாளர்களிற்காகவும் மக்களுக்காகவும் எப்போதும் உண்மையாக குரல் கொடுத்து வருகிற நிலையில் ஆட்சியில் உள்ள அனுரகுமார தரப்பினர் தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு கடந்த காலங்களில் ஏமாற்றியவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கோட்டாபாய ராஜபக்ச 51 வீதத்திற்கு மேல் வாக்கெடுத்து ஐனாதிபதியாகிய போதும் அதே மக்களால் துரத்தியடிக்கப்பட்டதை பார்த்திருந்தோம்.

சிங்கள மக்களாலே தான் நான் வந்தேன் வந்தேன் என கூறிக் கொண்டிருந்த கோட்டாவிற்கே இதே கதி என்றால் கேவலம் வெறுமனே 42 வீதத்தில் வந்த உங்களுக்கு என்ன நடக்குமோ. ஆகவே பொய்யான வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றாமல் உள்ளீர்கள். ஆக மொத்தத்தில் பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி உள்ளீர்கள். எனவே உங்கள் வழியை நீங்கள் சரி பண்ணாவிட்டால் உங்களுக்கும் இது தான் நடக்கலாம். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றாதீர்கள்.

குறிப்பாக நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் மக்களின் காணிகள் மக்களிடமே வழங்கப்படும் என்று கூறியிருந்தீர்கள். படையினர் வசமுள்ள மக்கள் காணியை விரைவில் விடுவிப்போம் என்றும் கூறியிருந்தீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு மாறாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளீர்கள். உங்களுடைய இந்தச் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.

உங்களது வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக கைவாங்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் யாழ் மண்ணிற்கு வரமுடியாமல் கால் வைக்க முடியாமல் செய்வோம்.

எங்களை ஏமாளிகள் என கருத வேண்டாம். ஏமாற்றுவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம்.மேலும் இன்றைய மே நாளில் நாம் சில தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்.

குறிப்பாக இராணுவ கையிருப்பில் உள்ள எமது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும், தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

இன்றைக்கு நாட்டில் நாளாந்தம் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் தேர்தல் வருகிறபோது குறைப்பது மாதிரி குறைத்துக் கொண்டாலும் மறுபக்கம் விலை வாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பாக சீனியை விட உப்பின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் ரஜலுணு என உப்பிற்கு ஒரு புதிய பெயரை வைத்தவர்கள் அதைப் பற்றிக் கேட்டால் பெயரைப் பார்க்காதீர்கள் ருசியைப் பாருங்கள் எனச் சொல்கிறார்கள்.

தமிழ் பெயரை சிங்களப் பெயராக அவர்கள் மாற்றுவார்களாம். அதைப் பற்றி கேட்டால் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். ஆக தமிழ் பெயரை அவர்கள் இங்கு மாற்றலாம். தாங்கள் தமிழ் பெயரை வைக்க தயாரில்லை.

இவ்வாறானவர்கள் தான் எங்களுக்கு வந்து உபதேசம் செய்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாத்திலே இதெல்லாம் நடக்கிறதென்றால் இனி என்ன என்ன எல்லாம் நடக்க போகிறதோ என்று பார்க்கலாம்.

சர்வதேச நாணய நிதிய ஓப்பந்தம் தங்களது அடிப்படைக் கொள்கைக்கு மாறானது எனக் கூறி அதற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றவர்கள் இன்றைக்கு அந்த ஒப்பந்தத்தில் எதனையும் மாற்றாது அப்படியே ஏற்றுக் கொண்டு செயற்படுகின்றனர்.

கடன் மறுசீரமைப்பு செய்கிற போது தொழிலாளர வர்க்கத்திற்கு செய்யும் துரோகம் என்று சொன்னவர்கள் அதனையே இன்று பெருமையாக பேசிவருகிற நிலைமையை காணக்கூடியதாக உள்ளது.

தங்களை இடது சாரிகள் என காட்டிகொண்டு மோசமான ஆட்சி செய்பவர்கள் தான் இந்த அனுரகுமார ஆட்சியாளர்கள்.

உங்களது தலைவர் ரோஹன விஜயவீர தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறியிருக்கின்றார் என்றால் நீங்களும் உண்மையான இடதுசாரிகள் என்றால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என சொல்லுங்கள். இல்லலாவிட்டால் சிவப்பு சட்டை அணிவதில் அர்த்தமில்லை தொழிலாளர்களுக்கு நன்மை அளிப்பதாக கூறிக் கண்டு முதலாளித்துவ கொள்கையில் பயணித்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு எப்படி நன்மையளிக்க முடியும். எனவே முதலாளித்துவ கொள்கையை விட்டு விலகி உங்களது பழைய ஆரம்பத்திற்கு வாருங்கள்.

லெலினிஸ கோட்பாட்டிற்கு வாருங்கள், சம்பள உயர்வு கொடுங்கள், அப்படியாக உங்களால் திரும்பி வர முடியாவிட்டால் மக்களிடம் செல்ல முடியாத நிலை உங்களுக்கு விரைவில் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.