SuperTopAds

ஒரு துண்டு நிலத்தை கூட இராணுவத்திற்கு கொடுக்கமாட்டோம், இறுதிவரை போராடுவோம், ரவிகரன் சீற்றம்..

ஆசிரியர் - Editor I
ஒரு துண்டு நிலத்தை கூட இராணுவத்திற்கு கொடுக்கமாட்டோம், இறுதிவரை போராடுவோம், ரவிகரன் சீற்றம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 60ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலங்களை விடும்வரையில் ஓய்ந்து போகவோ, அடங்கிப்போகவோமாட்டோம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரை ராசா - ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு மக்கள் 04.02.2019 இன்றைய நாள் தமது நிலத்தினை விடுவிக்குமாறு கோரியும், இலங்கையினுடைய 71ஆவது சுதந்திரநாளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையிலும் பாரிய போ ராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய கேப்பாப்புலவுக் கிராமமானது முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் எங்களுடைய மக்கள் தொடர்சியாக இன்றுடன் 706ஆவது நாளாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இதேபோன்று தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்கள் போராடுகின்றார்களா என்பதை நான் கேட்க விரும்புகின்றேன்.

எங்களுடையவர்களின் சொந்தக்காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும். 

ஏற்கனவே விடுதலைப் புலிகளுடைய காலத்தில் இந்த இடங்கள் இராணுவத்திடம் இருக்கவில்லை. எங்களுடைய மக்களின் கைகளில்தான் இருந்தது.

தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக யாரிடமும் கையேந்தாமல், தாங்களே தங்களுடைய இந்த நிலத்திலே இருந்து சகல விதத்திலும் தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொண்டிருந்த குடும்பங்கள்தான் இங்கே இருக்கின்றார்கள்.

706 நாட்களாக வீதியோரத்திலிருந்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்றால், அந்த மக்களுடைய உணர்வுகள், தங்களுடைய நிலந்தான் தமக்கு வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடுதான் இந்த வீதியோரத்திலிருந்து போராடுகின்றார்கள்.

சுதந்திரம் என்பது இலங்கைக்கென்று சொல்லுகிறார்கள். எங்களுடைய தமிழ் மக்களுக்கு இன்றுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தான் உண்மையான கருத்து.

தமிழ் மக்கள் நாங்கள் வீதியில் நின்று போராடுகின்றோம். எங்களுடைய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு காணிகளுக்கும், ஒவ்வொரு இடத்திலும் மக்கள் போராடுகின்றார்கள்.

கோத்தபாய கடற்படை முகாமென்று சொல்லி முள்ளிவாய்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் அமைத்துவிட்டு, 617 ஏக்கர் காணியை அங்கே அபகரிக்கும் நடவடிக்கைளை முற்று முழுதாக நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

அங்கே நாங்கள் போராடினால் கைதுசெய்கின்றார்கள். முல்லைத்தீவில் சுமார் 60ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அபகரித்து வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

எங்களுடைய நிலத்தைத்தான் நாங்கள் கேட்கின்றோம். தென்னிலங்கையில் வந்து ஹம்பாந்தோட்டையிலும் அல்லது மாத்தறையிலும் காணி வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை. எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும்.

இந்த மக்கள் வீதியோரத்தில் நுளம்புக்கடியிலும், ஏனைய துன்பங்களையும் அனுபவித்து வீதியோரத்தில் நின்று துன்பப்படுகின்றனர்.

நாட்டினுடைய தலைவர்கள் ஏன் இதற்கு செவி சாய்க்கவில்லை. எங்களுக்குச் சுதந்திரம் இல்லை. சுதந்திரம் இல்லாததால்தான். கறுப்புககொடி ஏந்தி நாங்கள் இங்கே போராடிக்கொண்டிருக்கின்றோம். எங்களுடைய மக்கள் போராடுகின்றார்கள். எங்களுக்குத் தேவை, எங்களுடைய நிலம். இராணுவத்தினருடைய நிலத்தை நாங்கள் கேட்கவில்லை, அல்லது சிங்களவர்களுடய நிலத்தினை நாங்கள் கேட்கவில்லை. தங்களுடைய நிலத்தினைத்தான் அவர்கள் கேட்கின்றார்கள்.

எத்தனை நாளுக்கு எங்களை வீதியில் விடப்போகிறீர்கள், எங்களுடைய நிலத்தினை எங்களுக்குத் தரும்வரை ஓயமட்டோம், அடங்கமாட்டோம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.