விவசாய அழிவுகளை கணிப்பீடு செய்யவந்த சிங்கள அலுவலர் விவசாயி மீது மூர்க்கத்தனமான தாக்குதல், விவசாயி வைத்தியசாலையில் அனுமதி..
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கின் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் கமத்தொழில் காப்புறுதி சபையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இந் நிலையில் 30.01.2019ஆம் நாள் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள வயல் நிலங்கள் மதிப்பீடுசெய்யப்பட்டன.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிக்கும், காப்புறுதிச் சபையால் வந்தவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளையடுத்து காப்புறுதிசபையால் வந்தவர் விவசாயியைத் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான விவிவசாயி கருத்துத் தெரிவிக்கையில்,
கமத் தொழில் காப்புறுதிச் சபையால் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட குழுவினரில் எந்தவொரு தமிழ் அதிகாரிகளும் இன்று வருகைதரவில்லை.
வருகைதந்தவர்கள் அனைவரும் சிங்கள அதிகாரிகள் என்பதுடன், அவர்களுக்கு நாம் கூறும் விடயம் எதுவும் விளங்கவில்லை.
எனக்கு 12.30மணியளவில் தொலைபேசி அழைப்பெடுத்து, காணி உரிமையாளர்கள் காணிக்குள் நின்று பார்வையிடவேண்டும், கையொப்பமிடவேண்டும் என்று கூறி முல்லைத்தீவிலிருந்த என்னை அழைத்தார்கள்.
காப்புறுதிக்குரிய படிவம் நிரப்புவதற்காக கூப்பிட்டு, மதியம் 02மணியளவில் என்னைத் தனிமைப்படுத்தி, அவரிடம், இவரிடம் சந்தியுங்கள் என்று கூறி அலைக்கழித்து, தனிவயல் வெளியில் இருந்த ஒருவரை சந்திக்கவைத்தனர்.
அவரைச் சந்தித்த போது நீயா எனக்கு ஊதியம் தருகிறாய் என்று கேட்டதுடன், உன்னுடைய வீட்டு வேலை செயவதற்கு நான் வரவில்லை என்று கூறியதுடன், உன்னுடையவயல் தூரமாக உள்ளது வந்து பார்க்கமுடியாது என்றும் கூறினார்.
அதற்கு வந்து வயலைப் பார்கமுடியுமெனில் பாருங்கள், நான் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே இப்போது வந்து சேர்ந்தேன், எனக்கு நூறு சதவீதமும் வயல் இழப்பு என்று கூறினேன்.
அதற்கு அவர் நீ சொல்லும் இடத்தில் சொல்லி எடுக்கின்ற நடவடிக்கையை எடு, செய்வதைச் செய்துபார், என்று சிங்களத்தினால் ஏசியதுடன், உனக்கு எதுவித கொடுப்பனவும் தரமுடியாது என்றும் கூறினார்.
ஏன் தரமுடியாது என்று கேட்டதற்கு, அதற்கு எனக்கு அவர் நெஞ்சில் அடித்து கீழே தள்ளிவிட்டார்.
அவரின் தாக்குதலால் எனக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டது. ஆனாலும் இதை நான் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாது, மீண்டும் சாமாளித்துக்கொண்டு அவர் வரும்போது ஓரமாக நின்றிருந்தேன்.
அப்போது அவர் என்னை அங்கிருந்து செல்லுமாறு ஏசினார், நான் அங்கிருந்து செல்ல முற்பட்டவேளை என்னைத் துரத்தித் துரத்தித் தாக்கினார். என்றார்.
இந்நிலையில் தாக்குதலுக்குளான விவசாயி தற்போது மாஞ்சோலை வைத்தியசாலையில், 5ஆம் நோயாளர் விடுதியில், 19ஆம் இலக்க கட்டிலில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.