கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது
கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
கிழக்கில் வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தமை தொடர்பில் இன்று(24) சுகாதார சேவைகள் பணிமனையில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது.
மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே மேற்படி வைத்தியசாலை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு உருவாக்கப்பட்ட கரடியனாறு சிகிச்சை நிலையத்திற்கு கல்முனை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட மூவர அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையால் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவுசெய்ததற்கு அமைய பாலமுனை வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் மேலும் பல வைத்தியசாலைகளை இவ்வாறு கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியமைக்க சுகாதார அமைச்சு முடிவுசெய்துள்ளது' என அவர் தெரிவித்தார்.
இதே வேளை கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ள நிலையில் இவர்களில் பெலியகொட மீன் சந்தை தொடர்பில் தொடர்பு பட்டவர்கள் என கொரோனா தொற்றாளர்கள் 8 பேரும் மற்றுமொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை பொத்துவில் நிந்தவூர் பகுதியில் உள்ள 9 பேருக்கு பொசிட்டீவ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனஅவர் குறிப்பிட்டார்.கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.