SuperTopAds

அளவெட்டி- பன்னாலையில் குழப்பம், பிரதேச செயலாினால் பாாிய முறுகல் தவிா்க்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
அளவெட்டி- பன்னாலையில் குழப்பம், பிரதேச செயலாினால் பாாிய முறுகல் தவிா்க்கப்பட்டது..

நீர்கொழும்பில் உள்ள கம்பனி ஒன்றினால் பொன்னாலையில் இயக்கப்படும் ஐஸ் தொழிற்சாலைக்கு அளவெட்டி - பன்னாலையில் தண்ணீர் எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பிரதேச மக்களாலும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுப்பதால் தமது பிரதேச நன்னீர் வளம் பாதிக்கப்படும் என்பதாலேயே குறித்த நிறுவனம் தண்ணீர் எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நீர்கொழும்பில் உள்ள சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரின் கம்பனியின் பெயரால் பொன்னாலைச் சந்தியில் ஐஸ் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு ஐஸ் உற்பத்தி இடம்பெற்று வருகின்றது. இதற்காக வலி.மேற்கு மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை எல்லைக்குள் உள்ள கிணறுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான லீற்றர் நீர் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில், அளவெட்டி – பன்னாலை – நகுலேஸ்வரம் வீதியில் மேற்படி கம்பனியின் பெயரில் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் குழாய்க் கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு சமீபமாக, 

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் மலசலகூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தங்குவதற்கு ஏற்ற வகையில் சிறிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பவுஸர் வாகனம் சென்று வருவதற்கு ஏதுவாக அங்கு புதிய தார் வீதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கம்பனியின் செலவிலேயே இந்த வீதியும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இம்மாதம் 3 ஆம் திகதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி குழாய்க் கிணற்றில் இருந்த முதன் முதலாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பிரதேச மக்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து அவர்களும் மக்களும் இணைந்து 5 ஆம் திகதி தண்ணீர் எடுக்க முற்பட்டபோது நேரடியாக அங்கு சென்று நீர் எடுப்பதைத் தடுத்து நிறுத்தினர். அத்துடன், அவர்களின் ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டன. இதன்போதே அவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்தது.

இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கும் பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களும் அங்கு சென்று விடயங்கள் தொடர்பாகக் கேட்டறிந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

நிலத்தடி நீர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இனிமேல் அங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டாம் என குறித்த நபர்களுக்கு மக்களால் அறிவுறுத்தப்பட்டது.