மொழி உாிமைப் போராளி செ.கோடீஸ்வரனுக்கு யாழ்.நீதிமன்றத்தில் விசேட அஞ்சலி..
தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாண மேல் நீதிமன்றின் சிறப்பு அமர்வு யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் கூடிய இந்த சிறப்பு மேல் நீதிமன்ற அமர்வில் மறைந்த மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அமர்வில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமகமலன், யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், தொழில் நியாய சபையின் தலைவர் வெள்ளத்தம்பி முகமெட் சியான்
மற்றும் சட்டத்தரணிகள், சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரனின் இளைய புதல்வர் மருத்துவர் கே.சிவகுமார் உள்ளிட்ட உறவினர்கள் பற்கேற்றனர். அமர்வின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுப்ரமணியம் பரமராசா இரங்கல் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இரங்கல் உரையாற்றினார். ஒரு நீதிமன்றத்தில் பணியாற்றிய எம்மை விட்டகலும் சட்டத்தரணி ஒருவரை நினைத்து அவரது ஆன்ம ஈடேற்றத்தினை வேண்டி நீதிமன்ற சிறப்பு அமர்வு இடம்பெறுவது மரபு வழியான ஒன்று.
அந்த வகையிலே மரியாதைக்குரிய, மாண்புமிக்க, மனிதத்துவமுடைய, மூத்த சட்டத்தரணி, செல்லையா கோடீஸ்வரன் பெப்ரவரி 15ஆம் திகதி அன்று எம்மை விட்டு மீளாத்துயில் கொண்டுள்ளார். அமரர் செல்லையா கோடீஸ்வரன் இறுதி நிகழ்வுகளில் கலந்து எமது ஆழ்ந்த அனுதாபங்களை
நாம் எல்லோரும் தெரிவித்திருந்தோம். உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் நீதிபதிகளாகிய நாம் எல்லோரும் சட்டத்தரணிகளாகிய எல்லோரும் நீதிமன்ற உத்தியோகத்தர்களாகிய எல்லோரும் சட்டத்தரணி அமரர் செல்லையா கோடீஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கூடியிருக்கிறோம்.
நாம் எல்லோரும் எழுந்து நின்று அமரர் கோடீஸ்வரனை நினைத்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவோமாக!
செயற்கரிய செயல்கள் பல புரிந்து வையத்துள் வாழ்வாங்கு எமது காலத்தில் வாழ்ந்து அமரத்துவமடைந்த செல்லையா கோடீஸ்வரனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை எழுதும்போது அவரின் பழைய நினைவுகள், அவர் செய்த மகத்தான சேவைகள் வந்து எனதுள்ளத்தை பதறவைக்கின்றது.
“வாழ்வது ஒரு முறை வாழ்த்தவேண்டும் தலைமுறை” என்ற ரீதியில் நல் வாழ்வு வாழ்ந்தவர். ஆம், செல்லையா கோடீஸ்வரன் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். கடந்த பத்து வருடங்களாக ஓரிடத்திலேயே குலுங்காமல் சலிக்காமல் உழைத்து உயிர் விட்டுவிட்டார். அன்னாரின் மறைவு அவருக்கு கிடைத்த முத்திப்பேறு.
அவரை இழந்து நிற்கும் அன்புத்துணைவி கோணேசரஞ்சிதம் மற்றும் பிள்ளைகளான மருத்துவர் பரமேஸ்வரன், மருத்துவர் சிவகுமாரன், கோணேஸ்வரி, சித்திரா மேலும் உற்றார்உறவினர் நண்பர்களுக்கு பெரிய இழப்பாகும். செல்லையா கோடீஸ்வரனை நான் நீதித்துறையில் இணைந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில்
சேவையாற்ற வந்த 1999களில் அறிந்து கொண்டேன். அப்போதைய காலச் சூழ்நிலைகளில் மனிதத்துவமுடைய ஆச்சாரசீலமுடைய சட்டத்தரணியாக கோடீஸ்வரனை நான் கண்டேன்.
ஏழைகளுக்காக நீதிவேண்டி ஊதியம் பாராது, தன்நலம் கருதாது அவர் ஆற்றிய சேவை, வெளிப்படுத்திய உணர்வுகள், அவர் எடுத்த தற்துணிவான முடிவுகள், அன்னாரை தனித்துவம் மிக்கவராக இனங்காட்டியதுடன் மெய்யியலாளர் பிளேட்டோவின் சிந்தனைக் கோட்பாடான நிதானம்,
நீதி, வீரம், பெருந்தன்மை, உண்மை இவைதான் ஆத்மாவின் அணிகலன்கள் என்ற கோட்பாட்டிற்கு ஏற்றவாறு வாழ்ந்த ஒரு கர்மவீரன் என்றால் அது மிகையாகாது.
இவர் மக்களுக்கு ஆற்றிய சேவை குறிப்பாக, வடமராட்சி மக்களுக்கு ஆற்றிய சேவை வெகுவாக சிலாகிக்கப்படுகின்றது. பருத்தித்துறை நீதிமன்றத்தில் அந்நேர கால சூழ்நிலைகளில் அவர் கர்ச்சிப்பது என் கண் முன்னே நிழல் ஆடுகின்றது.
சட்ட வல்லுனர் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை சுட்ட பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நுணுக்கமாகவும் தெளிவாகவும் முன்வைப்பது சட்டத்தரணி கோடீஸ்வரனுக்குரிய தனித்துவம் என நான் காண்கின்றேன்.
தனது நான்காவது வயதில் தந்தையை இழந்து “தலைகுனிந்து கற்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே” என்ற கூற்றுக்கமைய கல்வி கற்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் எழுதுவினைஞராக தன்னை இணைத்துக்கொண்டு சிறந்த நற்சேவையை ஆற்றும்போது
1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உத்தியோக பூர்வ மொழிச் சட்டமும், அதன்கீழ் 1961ம் ஆண்டு வெளிவந்த திறைசேரி சுற்றுநிருபமும் சோல்பரி அரசியல் யாப்பின் 29(2)ஆம் பிரிவிற்கு முரணானது என்று லண்டன் கோமறைக் கழகம் வரை சென்று வழக்கு நடாத்தி வெற்றி கண்டவர்.
இவ்வழக்கானது இலங்கையில் மட்டுமன்றி உலக அரங்கிலும் பிரசித்தி பெற்றதாக விளங்குவதைக் காணலாம். தமிழ் அரச ஊழியர்களை உள்ளடக்கி அரச எழுதுவினைஞர் சங்கத்தை உருவாக்கி அதன் செயற்திட்டத்தில்
தன்னை முழுமையாக அர்ப்பணித்து அரும் பணியாற்றியவர். பின்னர் அப்பதவியிலிருந்து விலகி இலங்கை சட்டக்கல்லூரியில் இணைந்து 1969இல் தன்னை ஒரு சட்டத்தரணியாக நிலை நிறுத்திக் கொண்டதுடன் தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளராக இருந்து அரும்பணியாற்றினார்.
இவ் வேளையில் அமரர் செ.கோடீஸ்வரனுக்கு எமது கவிதாஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.
வடக்கு கிழக்கு கலந்து பெற்ற தலைமகனே கோடீஸ்வரா!
குழந்தை மனமும் உயர்ந்த மெல்லிய தோற்றமும்
தெய்வ சிந்தையில் நெற்றியில் திலகமும்
கண்டவர் மகிழ புன்னகை உதடும்
காரணத்தேடலும் காரியச் செயலும்
திறம்படப் பெற்றே எளிமையாய் இருந்தீர் - இன்று
உங்கள் இருவிழி மூடியதால்
பல விழிகள் ஈரத்தால் நனைந்தனவோ!
எழுதுநராக தான் அமர்ந்து அதில் தடைகளும் எழுந்திட
தழிழரின் அவலம் திசைகளும் அறிந்திட
தடைகளை எழுதிடும் உலகமும் குனிந்திட
தரப்பினராகி வழக்கொன்று அமைத்தீர்
அகிலமே அதிர்ந்திட வெற்றியும் கண்டீர் - பின்
சட்டத்துறை புகுந்து சட்டத்தரணியாய் மிளிர்ந்து
ஏழைகள் வாழ்வோங்க வழக்குரைத்தீர் - இன்று
எமையெல்லாம் கண்ணீரில் மூழ்க விட்டீர்கள் ஐயா!
பிறதேசம் பிள்ளைகளை அனுப்பிவிட்டு நம்தேசம் உய்யும்வரை
அத்தேசம் வரமாட்டேன் என்று வீராப்பாய் நின்றவரே – உங்கள்
இனப்பற்றும் மொழிப்பற்றும் கண்டு வியக்கிறது உள்ளமெல்லாம்
உன்னவளும் பிள்ளைகளும் கதிகலங்கி வாடி நிற்க
உறவுகளும் சட்டத்தரணிகளும் உங்கள் பிரிவு கேட்டு ஏங்கி நிற்க
சொல்லாமல் கொள்ளாமல் விண்ணுலகம் சென்றதேனோ?
உயிரில் கலந்திருந்த உங்கள் உறவுகளின் துயரில்
பங்கெடுத்து கண்ணீர் ததும்ப அஞ்சலித்து நிற்கின்றோம்.
நன்றி
இன்றைய நிகழ்வுகள் தொடர்பான பதிவுகளை முறையாக தயாரித்து அமரர் செல்லையா கோடீஸ்வரனின் அருமைத் துணைவியார் கோணேசரஞ்சிதம் கோடீஸ்வரன் அம்மையாரிடம் சேர்ப்பிக்க மேல் நீதிமன்ற பதிவாளர் பணிக்கப்படுகின்றார்.
கோடீஸ்வரனின் வரவலாறு
வத்தேகமவில் பிறந்த அவர் யாழ்ப்பாணம் மீசாலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அரச சேவையில் எழுதுவினைஞராக இணைந்து கொண்ட அவர், தமிழ்மொழி மீதும், தமிழ் சமூகம் மீதும் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கினார்.
தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 'அரச சேவையிலிருந்த தமிழ் அலுவலர்கள் சிங்கள மொழியில் தேர்ச்சியடைய வேண்டும். தவறினால் படி, பதவி உயர்வுகள் மறுக்கப்படுவதுடன் சேவையிலிருந்து எதுவித இழப்பீடுகளும் இன்றி நீக்கப்படுவார்கள்' என்று அரசால் அறிவிக்கப்பட்டது.
அப்போது கேகாலை கச்சேரியில் பணிபுரிந்து கொண்டிருந்த கோடீஸ்வரன் குறித்த விதிக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார். அவருக்கு அரச எழுதுவினைஞர் சங்கம் பக்கத் துணையாகச் செயற்பட்டதுடன் தமிழ் மக்களும் துணை நின்றனர்.
கேகாலை நீதிமன்றத்தின் அன்றைய நீதிபதி கிரெஸ்டர், தனிச்சிங்களச் சட்டம் செல்லுபடியற்றதென்றும் அதனால் தமிழ் அரச அலுவலர் சிங்களத்தில் சித்தியடைய வேண்டுமென்ற விதி ஏற்புடையதல்ல என்றும் தீர்ப்பளித்தார்.
அத்தீர்ப்புக்கெதிராக அரசு மேன்முறையீடு செய்தது. மேன்முறையீட்டை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், அரச அலுவலர் அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது என்று தீர்ப்பளித்து கேகாலை நீதிமன்றத் தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கியது.
மேன்முறையீட்டுத் தீர்ப்புக்கெதிராக இங்கிலாந்தின் பிரிவுக் கவுன்ஸிலுக்குக் கோடீஸ்வரன் சார்பில் முறையிடப்பட்டது. இங்கிலாந்தின் மேன்முறையீட்டு நீதிமன்றமான பிரிவுக் கவுன்ஸில் அரச அலுவலர் அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையுள்ளதென்று தீர்ப்பளித்து இலங்கை
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவற்றதாக்கியதுடன் தனிச் சிங்களச் சட்டத்தின் செல்லுபடித் தன்மையை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும்படி இலங்கை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை திருப்பி அனுப்பியது.விசாரணைக்காக அனுப்பப்பட்ட அவ்வழக்கு விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டு, 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பினூடாக கைவிடப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டது.
இவ்வாறு சட்ட ரீதியாக அகிம்சாவழியில் தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட முன்னின்று அரசுக்கு எதிராக அரச அலுவலராக இருந்த நிலையிலும் துணிந்து நின்று போராடியவர் அமரர் கோடீஸ்வரன்.
மொழிவழித் தொழிங்சங்கங்களின் குறிப்பாக அரச எழுதுவினைஞர் சங்கத்தின் துணையுடனும் தமிழ் மக்களின் நிதி மற்றும் ஆதரவு, ஒத்துழைப்புடனும் நடத்தப்பட்ட இவ்வழக்கின் முடிவு எவ்வாறிருந்த போதிலும், எந்தவொரு அரசியலமைப்பினதும் ஒத்துழைப்பு இன்றியே வழக்கு இறுதிவரை நடத்தப்பட்டது.
'கோடீஸ்வரன் மொழி வழக்கு' என்று புகழ்பெற்ற இவ்விழக்கு தனியொருவரான கோடீஸ்வரனால் கொண்டு நடத்தப்பட்ட போதும், அனைத்து தமிழ் மக்களதும் உள்ளக்கிடக்கையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாயமைந்ததால் இலங்கைத் தமிழரின் மொழியுரிமைப் போராட்டத்தில் அழிக்க முடியாத வரலாறாகவும், பெறுமதிக்க செயற்பாடாகவும் அமைந்தது.
பின்னாளில் அரச எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவராகவிருந்து செயற்பட்ட கோடீஸ்வரன், தன்னைத் தேடிவந்த பல அரசியல் பதவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. திருகோணமலையில் புகழ்பெற்ற மருத்துவர் சித்திரவேலுவின் மகளை மனைவியாக வரிந்துகொண்ட இவர், திருகோணமலைத் தமிழ் மக்களின் பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கினார்.
திருகோணமலைத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்காத இவர், அரசியலில் ஈடுபட்டிருந்ததால் தமிழர்களின் தன்னிகரற்ற நேர்மையான அரசியல் தலைவராகியிருப்பார் என்பதில் ஐயமில்லை. தமிழ் மக்கள் வடக்கென்றும்,
கிழக்கென்றும், மலையகம் என்று பிரிந்து நிற்கக் கூடாதென்பதில் தீவிரம் கொண்ட கோடீஸ்வரன் மலையகத் தமிழர்களது உரிமைக்கும், நன்மைக்கும் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை.
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைப் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த வ. நவரத்தினத்தின் கரங்களைப் பலப்படுத்து
முகமாக அவருடன் இணைந்து தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டார். பிரபல குடியியல் சட்டத்தரணியான கோடீஸ்வரன் என்றுமே சாதாரண மக்களில் ஒருவனாக அனைவரதும் அன்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.