SuperTopAds

சஹ்ரான் தீவிரவாதியின் நடவடிக்கை மற்றும் கொரோனா பிரச்சினையினால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்

ஆசிரியர் - Editor III
சஹ்ரான் தீவிரவாதியின் நடவடிக்கை மற்றும் கொரோனா பிரச்சினையினால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்

சஹ்ரான் தீவிரவாதியின் நடவடிக்கை மற்றும் கொரோனா பிரச்சினையினால் பல மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு   நீதியை பெற்று தாருங்கள் என  வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 26 பேர் கொண்ட அவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்முனை ஊடக மையத்தில் மேற்கொண்ட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும் தங்கள் கருத்தில் குறிப்பிட்டதாவது 

கடந்த அரசாங்கத்தில் 18 ஆயிரம் பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துகொள்ளப்பட்டோம்.இதில் நாங்கள் 26 பேர் வெளிமாகாணங்களுக்கு வேலைக்கு சென்று மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.வெளிமாகாணத்தில் உள்ள எமது பிரதேச செயலகங்கள் எம்மை விடுவித்தும் கூட தொடர்ந்து அங்கு பணியாற்றுமாறு வற்புறுத்துகின்றனர்.இதனால் நாம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.எமது பிள்ளைகள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.அங்கு அவர்களை கொண்டு சீரழிகின்றோம்.இதனால் எமது பிள்ளைகளின் படிப்பு உட்பட அனைத்து விடயங்களும் பாதிக்கப்படுகின்றது.இதனால் அனைத்து தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எமக்காக முன்னின்று தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பதுளை மாட்டம் மஹியங்கனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஏ.எச்.முஜீபா தெரிவித்தார்.

நாங்கள் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளாக இருந்து தற்போது அபிவிருத்தி உத்தியோர்களாக 01.01.2021 அன்று  நிரந்திர நியமனம் பெற்றவர்கள்.பின்னர்  22.04.2021 அன்று  பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டு கண்டி நுவரெலியா பதுளை மொனராகலை போன்ற வெளிமாகாணத்தில் உள்ள பகுதிகளுக்கு அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ளோம்.ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மேன்முறையீட்டு படிவமோ அல்லது ஏனைய முறைப்பாடுகளோ மேற்கொள்ள கால அவகாசம்  எமக்கு வழங்கப்படவுமில்லை. மேலதிகாரிகள் எவரும் மேன்முறையீடுகளை  ஏற்றுக்கொள்ளப்படவுமில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.தற்போது வெளிமாகாணங்களுக்கு சென்றுள்ள நாம் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.தங்குவதற்கு எமக்கு இடம் வழங்கப்படவில்லை காரணம் கொரோனா பிரச்சினை மற்றும் சஹ்ரான் தீவிரவாதியின் நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டி எம்மை திருப்பி அனுப்புகின்றனர்.இது பெரும் பிரச்சினையாக உள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து நியமனத்தை வெளிமாகாணங்களுக்கு வழங்கிய போது எமக்கு தங்குமிடங்கள் வழங்கப்படவுள்ளதாக போலி வாக்குறுதி ஒன்று வழங்கப்பட்டே அங்கு இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்டோம்.அது மாத்திரமன்றி இரவு வேளையே எமக்கான நியமனமும் கிடைக்கப்பெற்றருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.இதனால் எல்லா தரப்பினராலும் ஏமாற்றப்பட்டவர்ளாக இருக்கின்றோம்.மேலும் நாங்கள் அனைவரும் தமிழ் மொழி மூலம் தான் பட்டப்படிப்பை மேற்கொண்டு இருந்தோம்.தமிழ் மொழியில் தான் எமது பட்டதாரி பயிற்சி காலத்தையும் மேற்கொண்டிருந்தோம்.ஆனால் நாங்கள் தற்போது கடமைக்காக அனுப்பப்பட்டுள்ள பிரதேச செயலகங்களில் தமிழ் பேசுவதற்கு கூட வேறு எவரும் இல்லை.எமது பிரச்சினையை கூட கூற முடியாத நிலைமையில் நாம் இருக்கின்றோம்.சிங்கள மொழி தெரியாது திணறுகின்றோம்.தற்போது வாழ்க்கை செலவு என்பதும் பெரும் சுமையாக காணப்படுகின்றது.தற்போது நாம் வெளி மாகாணங்களிலும் எங்களது மனைவிமார் மற்றுமொரு மாகாணத்திலும் தொழில் செய்கின்றனர்.

இதனால் எமது பிள்ளைகளை  பார்ப்பதற்கு கூட யாருமே இல்லாத நிலைமை உள்ளது.வெளிமாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட 26 பேரும் அண்மையில் திருமணம் முடித்தவர்களாவர்.சிறுகுழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்களாவர்.இது தவிர எமது தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய போதிலம் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் கூற விரும்புகின்றேன்.மேலும் வெளிமாகாணங்களில் இணைப்பு செய்யப்ட்ட பிரதேச செயலகத்தில் கூட எமக்கான கதிரை மேசைகளோ இல்லை.அங்கு எம்மை ஒரு விதமாக வழிநடாத்துகின்றனர்.எந்த அடிப்படையில் எம்மை வெளிமாகாணங்களுக்கு தெரிவு செய்து அனுப்பினார்களோ என்பதும் எமக்கு தெரியாது.இது குறித்து நாம் கேட்டிருந்தும் உரிய பதில் வழங்கப்படவில்லை.பதுளை நுவரெலியா மொனராகலை கண்டி போன்ற பகுதிகளுக்கு நாம் அனுப்பப்பட்டுள்ளோம்.

எனவே எமது பிரச்சினைகளை எல்லாம் கவனத்தில் இனியாவது கரிசனை செய்யுங்கள்.எமது பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் உடனடியாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் எம்.ரி முஜாஹிதீன் கேட்டுக்கொண்டார்.

பலநோக்கு அவிருத்தி செயலணி திணைக்களத்தில் தற்போது  எம்மை இணைத்துள்ளார்கள்.இதில் நியமனம் பெற்ற காலத்தில் இருந்து இதுவரை எம்மை விடுவிக்காமல் சீரழிக்கின்றனர்.ஆனால் ஏனைய அவிருத்தி உத்தியோகத்தர்கள் மேன்முறையீட்டின் பிரகாரம் விடுவிக்கப்பட்டு தங்களது சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்று கடமையாற்றுகின்றனர்.ஆனால் எமக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.எம்மை இதுவரை அரசாங்கமோ உரிய அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என தெரிவிக்க விரும்புகின்றோம் என நுவரெலியா மாவட்டம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பியானி என்பவர் குறிப்பிட்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த புதன்கிழமை (28)  ஒன்றுகூடிய 26 பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர்  போராட்டத்தை தற்காலிகமாக முடித்து கொண்டு மனித உரிமை ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்திற்கு சென்று முறைப்பாட்டினை வழங்கி இருந்தனர்.

குறித்த  வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 26 பேரும் கடந்த  நல்லாட்சி அரசாங்கத்தில் பட்டதாரி பயிலுநர்களாக இணைப்பு செய்யப்பட்டு 1.1.2021 அன்று நிரந்திர நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு உள்வாங்கப்பட்ட 26 பேர் எதுவித நேர்முகப்பரீட்சை இன்றி 22.04.2021 அன்று இரவோடு இரவாக மத்திய மாகாணம் ஊவா மாகாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிக்கை இட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

 

குறித்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் குறித்து எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை குரல்கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுடன் நுவரெலியா பதுளை மொனராகலை கண்டி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 26 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பு செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.