முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது- தம்பிராசா செல்வராணி

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது- தம்பிராசா செல்வராணி
பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்வேன் என கூறியவர் ஒரு ஏற்பாடுகளையும் செய்யவில்லை.
எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம் தேதி வரை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரமாகும். அதாவது முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரமானது எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 18ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் அனைத்து பொதுமக்களும் இந்நிகழ்வினை உணர்வு பூர்வமாக மேற்கொள்ள ஒன்றிணைய வேண்டும் என வடக்கு கிழக்கு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவவியுமாகிய தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது
எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம் தேதி வரை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரமாகும். அதாவது முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரமானது எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 18ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் அனைத்து பொதுமக்களும் இந்நிகழ்வினை உணர்வு பூர்வமாக மேற்கொள்ள ஒன்றிணைய வேண்டும்
இந்நிகழ்வானது கடந்த 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்று முடிந்த போர் காரணமாக ஓர் இனம் அழிந்த ஒரு கதையாகவும் இரத்த ஆறு ஓடிய நாளாகவும் எங்களது உறவுகள் இந்த மாதம் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எங்கள் உறவுகள் குடும்பம் குடும்பமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நாளாக அனுஸ்டிகும் ஒரு முக்கியமான நாளாகும்.ஒரு இடவழிப்பு வாரமாக வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட இருக்கின்ற இந்த வாரத்தில் 16 வருட காலமாக வலிகளை சுமந்து எங்களது உறவுகளுக்கான நீதி கிடைக்காமல் இன்று வரை நாங்கள் வீதிகளில் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களுக்கான உரிய நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்று நீதியை பெற முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். அது மட்டுமல்ல உண்மையில் அந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை அரசு அங்கு போர் நடந்து கொண்டிருக்கும் போது பொருளாதார தடையை விதித்து ஒரு உணவு கூட அப்பகுதிக்கு எடுத்து செல்ல முடியாத காலகட்டத்தில் அங்கு பட்டினி சாவு ஏற்பட்டது.ஆனால் எமது உறவுகள் உப்பில்லாத அரிசிகளை உபயோகித்து நீரை ஊற்றி அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக கஞ்சி தயாரித்தது.அது தான் அந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும். அன்று முள்ளிவாய்க்காலில் அக்கஞ்சிக்கு வரிசையில் நின்று கொண்டிருக்கின்ற வேளையில் எத்தனையோ செல் தாக்குதல்கள் விமானத் தாக்குதலுக்கு மத்தியிலும் கஞ்சி சிரட்டையுடன் உறவுகள் அவ்விடத்தில் மரணம் அடைந்தார்கள்.
இப்போது ஆட்சிக்கு வந்துள்ள அனுர அரசு ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் தனக்கும் இவ்வாறான வலி தெரியும் எனவும் தனது தாயும் பிள்ளையை தொலைத்து விட்டு கண்ணீர் வடித்த காலமாகும் எனக் கூறி இன்று ஆட்சிக்கு வந்திருந்தார்.ஆனால் இதுவரை காலமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன செய்யலாம் என்ன செய்ய முடியும் என்ற தீர்மானம் எதையும் அவர் மேற்கொள்ளவில்லை. ஆனால் அன்று ஒரு நாள் பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்வேன் அல்லது இல்லாமல் செய்வேன் என்று கூறியவர் இன்று அவர் ஆட்சியில் வந்தும் அதற்கான எந்த ஒரு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இன்று அவர் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு இங்கு உள்ள எமது இளைஞர்களையும் இங்குள்ள தமிழ் மக்களையும் நல்லாட்சி என்ற போர்வையில் இவ்வாறான சட்டங்களை வைத்து கைது செய்து கொண்டிருக்கிறார்.ஆனால் இன்று இந்த அனுர அரசு பற்றியும் எமக்கு எவ்வாறான தீர்வுகளை தருவார்கள் என்றும் எமது இளைஞர்களுக்கு இதுவரை தெரியாது.
ஆனால் எங்களுக்கு அவர் குறித்து தெரியும் .கடந்த காலங்களில் எத்தனை ஜனாதிபதிகளை நாங்கள் கடந்து வந்திருக்கின்றோம். எத்தனை அரசாங்கங்களைக் கடந்து வந்திருக்கின்றோம் .ஆனால் எங்களுக்கு எந்த விதமான ஒரு பதிலும் கிடைக்கவில்லை. எமக்கு எந்தவிதமான ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. அதன் பிற்பாடு தான் நாங்கள் இன்று சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம் .அது மட்டுமல்ல மீண்டும் ஓ. எம். பி. ஐ எங்களிடம் முன் வைக்கிறார்கள்.
இந்த உள்ளக பொறிமுறை வேண்டாம் எனக் கூறியும் இவ்வாறு அவர்கள் செயற்படுகின்றார்கள்.நாங்கள் இன்று சர்வதேச பொறிமுறையை நாடி இருக்கின்றோம் .ஆகவே எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே 18 ஆந் திகதி வரை உணர்வு பூர்வமாக இன அழிப்பு வாரத்தினை அனுஸ்டிக்க முடியும்.
இந்த முள்ளிவாய்க்காலில் எங்களுக்கு நடந்த அவலம் காரணமாக எமது இனமான தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது. ஒரு தமிழ் இனமே அங்கு அழிந்திருக்கின்றது .எனவே இந்த வாரத்தை உணர்வு பூர்வமாக மேற்கொள்ள மதகுருமார்கள் முச்சக்கர வண்டி சங்கத்தினர் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடகவியலாளர்கள் இளைஞர் ஒன்றியங்கள் விளையாட்டு கழகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் என அனைவரையும் நாங்கள் அழைக்கின்றோம்.
இத்தினத்தில் இவ்வாறு அஞ்சலி செலுத்துவது ஊடாக முள்ளிவாய்க்காலில் தொலைந்த தீர்வினை நாங்கள் எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் ஆகவே அனைவரும் ஒன்று திரண்டு இந்த முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்று தரும் முன் வர வேண்டும் என்று கூறி இருக்கின்றேன் என்றார்.
சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதிபனும் இச்செய்தியாளர் சந்திப்பில் உடனிருந்தார்.