மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை-பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா

மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை-பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா
மீனவனின் பிள்ளையான எனக்கு மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள்,மீனவர் சம்மேளனங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் சனிக்கிழமை (10) மாலை நடாத்திய மீன் திருட்டை ஒழிப்பது தொடர்பாக ஒன்று கூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்
தமது பிரச்சினைகள் சில தினங்களில் தீராது போனால் மீனவர்கள் வீதிக்கு இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். அதற்கான சூழ்நிலை உருவாகாது ஜனாதிபதி, மீன்பிடி அமைச்சர் போன்றோருக்கு இந்த பிரச்சினைகளை எத்திவைத்து தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.மீனவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன்.மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்க ஆர்ப்பாட்டம் செய்வதை விட அரச தலைவர்களுக்கு பிரச்சினையை எத்திவைப்பதே சிறந்த தீர்வு.மீனவனின் பிள்ளையான எனக்கு மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை.கடந்த காலங்களில் இருந்த அரசியல்வாதிகள் ஒலுவில் துறைமுகம் பற்றியோ, மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியோ எங்கும் பேசவில்லை. மீனவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. நான் பல வருடங்களாக பல்வேறு தரப்பினர்களையும் அணுகி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
பலருடைய குடும்பத்தின் வாழ்வாதாரமான இந்த தொழில் இப்போது கஷ்டத்தை உடைய நிலைக்கு சென்றுள்ளது. அந்த நிலையை நானும் அறிவேன். மீனவர்கள் போராட்டம் செய்து 10-15 நாட்களுக்குள் தீர்வு அடையலாம் என்று எண்ணுகிறார்கள். அது சாத்தியமில்லை. அரசாங்கம் அமைக்கப்பெற்று 06 மாதங்களே கடந்துள்ளது. ஜனாதிபதி, உரிய அமைச்சர்கள், உரிய அதிகாரிகளை கொண்டு விரைவில் தீர்வை பெற்றுத் தருவேன்.நாங்கள் ஜே.வி.பியை இங்கு அறிமுகம் செய்தபோது யாரும் எங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் மீனவர்கள் இம்முறை என்னுடன் சேர்ந்து வெற்றிக்காக உழைத்தார்கள். ஆனபோதிலும் நான் தோல்வி அடைந்தேன். கொள்கைகளை மாற்றி ஜனாதிபதி என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார் என்றார்.
இதே வேளை கடலில் நடக்கும் திருட்டை இல்லாதொழிக்க கோரி மருதூர் சதுக்கத்தில் மீனவர்கள் ஒன்று கூடி இப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வுகளை சகல தரப்பினரும் இணைந்து பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும் பாதுகாப்பு படையினரும் இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக இருப்பதுவும் ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து அம்பாரை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மீனவர்கள் இவ்வாறு ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.
இதன்போது தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா காரைதீவு பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர் ஏ. பர்ஹான் சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.எம். முபாரக் உட்பட மீனவர்கள் பலரும் கலந்து கொண்டு இங்கு உரையாற்றினர்.
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது. இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தை செயற்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவை நடந்த பாடில்லை. பாராளுமன்றத்திலும் கடந்த காலங்களில் எங்களின் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளது.
நாங்களும் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் எனபலரிடமும் பேசியும், கலந்துரையாடியும் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வும் கிட்டவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போகிறது. 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடாத்தப்பட்டு வருகிறது. மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதால் எங்களுக்கு பலத்த நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது. எங்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. பலத்த அச்சுறுத்தலை நாங்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம் என்றனர்.
எங்களின் குரல் உரியவர்கள் காதுக்கு சென்று எங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது போனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதுடன் மிகப்பெரிய எதிர்ப்பு நடவடிக்கையையும் தொழிற்சங்க போராட்டத்தையும் முன்னெடுப்போம் என அங்கு தத்தமது கருத்துக்களை முன்வைத்த அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள், மீனவர்கள் தெரிவித்தனர்