நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் - வலுக்கும் கண்டனங்கள்

நல்லூர் ஆலய சூழலுக்கு அருகாமையில் அசைவ உணவகம் திறக்கப்பட்டமைக்கு யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான விடயங்களை நாம் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் எனவும், புதிதாக மாநகர சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் பிரதேசத்தின் தன்மையறிந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழரின் பண்பாட்டுக் கலாசாரத்தின் வாழ்விடமாக யாழ்ப்பாணம் கருதப்படுகின்றது. அதிலும் நல்லூர் கந்தசுவாமி கோவில் உலகத் தமிழர்களின் வாழ்வியல் அடையாளம். அவ்வாறு அவ்வாலயம் அமைந்திருக்கின்ற சுற்றுவட்டப் பகுதிக்குள் ஒரு அசைவ உணவகம் ஆரம்பிப்பது என்பது ஏற்புடையாதாக இருக்கப் போவதில்லை. ஏன்எனில் இரு இச்சுற்றவட்டத்திற்குள் பல அசைவ உணவங்களை தோற்றுவிப்பதற்கான விதையாகவும் அமைந்துவிடும்.
ஏன்எனில் எம்மில் சிலரிடம் ஒரு பழக்க வழக்கம் இருக்கின்றது அவர் செய்கின்றார் தானே நான் செய்தால் என்ன என்ற சிறுபிள்ளைத்தனம். அதே போல் அந்த கடை இருக்கின்றது தாளே ஏன் நாங்கள் திறக்க கூடாது என்ற கருதுகோள் ஆரம்பித்திலேயே கருவறுக்கப்பட வேண்டும் என்றால் நல்லுர் சுற்றுச்சுழலில் இவ்வாறான கடைகள் ஆரம்பிப்பதனை தடுக்க வேண்டும்.
அவ்வாறான சட்டங்கள் ஒழுங்குகள் தீர்மானங்கள் இருக்கின்றனவா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் அவ்வாறாக சட்டங்கள் இயற்றப்படவில்லை என்பது உண்மை ஆனால் அதற்கு அப்பால் அப் பிரதேசத்தின் தன்மையறிந்து சில பொருத்தமான விடயங்களினை மேற்கொள்ள முடியும். அதற்கு ஒரு விடயத்தினை உதாரணமாக கொள்ள முடியும் அது யாதெனில்..
யாழ்.மாநகர சபையின் கொல்களம், மற்றும் யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான இறைச்சிக் கடைகள் எதுவும் வெள்ளிக்கிழமைகளில் திறப்பது இல்லை. குறித்த விடயம் எந்தவொரு சட்டத்திலும் அல்லது தீர்மானத்திலும் இல்லை. ஆனால் யாழ்.மாநகர சபை தான் ஆளுகைப்படுத்தும் பிரதேசத்தின் தன்மையறிந்து அதன் மக்களின் வாழ்வியலினை அறிந்து காலகாலம் பின்பற்றி வருகின்ற ஒரு விடயம். இவ்விடயத்தினை எதிர்ந்து ஒருவரினால் நீதிமன்றில் வழங்கும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் பிரதேசத்தின் தன்மையறிந்து அவருக்கு சாதகமாக தீர்பினை வழங்கவில்லை. வெள்ளிக்கிழமைகளில் கொல்களங்கள் பூட்டு இறைச்சிக்கடைகள் பூட்டு என்ற யாழ்.மாநகர சபை காலகாலம் பின்பற்றிவருகின்ற நடைமுறை இன்றும் தொடருகின்றனது.
இந்நிலையில் அதே யாழ்.மாநகர சபைக்கு முன்பாக நல்லூர் கந்தசுவாமி பெருந்திருவிழா காலத்தில் முதலாவது உற்சவகால வீதித்தடை அமைக்கப்படும் இடத்தில் குறித்த அசைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பெருந்திருவிழா காலத்தில் நல்லூர் கந்தப்பெருமானிடம் ஆருளாசி வேண்டி நல்லூர் காவடிகள் அணிவகுத்து நிற்கும் வீதிக்கு அருகில் இவ்வாறான கடைகள் ஏற்புடையது அல்ல.
காலகாலம் ஒரு பிரதேசத்தில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை நவீனமயமாக்கல் என்ற சிந்தனையில் உடைதெறிவது என்பது எவராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றும் அப்பிரதேச வாழ் மக்களினதும் ஏனையவர்களினதும் மனதினைப் புண்படுத்தும் செயல் எனவே குறித்த விடயம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
புதிதாக யாழ்.மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். காலகாலம் குறித்த பிரதேசத்தில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை உடைதெறிந்து அப்பிரதேசத்தின் விழுமியங்களை நீர்த்துப்போக்கும் செயற்பாட்டுக்கு யாழ்.மாநகர சபையும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கௌரவ உறுப்பினர்களும் துணை நிக்கபோகின்றார்களா என்பதனை எதிர்வரும் நாட்கள் வெளிப்படுத்தும்.
பொறுப்புணர்வுடன் கூறுகின்றேன் இவ்வாறான விடயங்களை நாம் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் ஆக பிரதேசத்தின் தன்மையறிந்து பொறுப்புணர்வுடன் செயற்படுவோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.