ரம்பொடை - கெரண்டிஎல்ல பேருந்து விபத்து - விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த பேருந்தில் சுமார் 75 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் கொத்மலை பொலிஸார், சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
விபத்து குறித்து ஆராய்வதற்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.