குடும்ப பிரச்சினை காரணமாகவே யாழ்.மாநகர முதல்வருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது..
யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து,அவர்களினது தனிப்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (25) அன்று கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செருக்கன் பிரதேச மக்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், சயந்தன் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் உயிரச்சுறுத்தல் தொடர்பாக
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்
“யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்டின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அச்சுறுத்தல் தொடர்பில் சிலரது பெயர்களை அவர்கள் சாடுகின்றனர்.அவர்மீது அச்சுறுத்தல் விடுப்பதாக இருப்பின் அவரது மனைவிக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டியதில்லை.
நேரடியாக அவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படும். எனவே அது அவர்களின் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம்.ஆனாலும் உயிர் அச்சுறுத்தலிற்கு உள்ளான அவர்கள் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கையும்,சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்ததோடு,
எஸ்.ரி.எப் பாதுகாப்பு பெறுவதனால் அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத சூழ் நிலை ஏற்படும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபையிலும், பின்பு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆர்னோல்ட் மாகாணசபையில் இருந்து,
மேயராக யாழ் மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளமயினையும் சுட்டிக்காட்டி மாகாண சபை காலங்களில் பகைமை இன்றி செயற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.