இந்தியாவிலிருந்து வருகிறது மற்றொரு புதிய ரயில், யாழ்ப்பாணம்- பெலியத்தை இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது..
மாத்தறை -பெலியத்தைக்கிடையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த புதிய ரயில் பாதை 90 வீதமான பணிகள் நிறைவு பெற்றுவரும் நிலையில், ரயில் பயணம் எதிர்வரும் தமிழ் -சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
27 கிலோமீற்றர் நீளமான இந்த ரயில் பாதை, மணித்தியாலத்திற்கு 120கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடியவை. சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப் பாதையும் 268 மீற்றர் நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளன. இலங்கையில் 559 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையே இதுவரை இருந்தது.
இதனைத்தவிர பெலியத்த ரயில் பாதையில் மேம்பாலங்களும் அமைந்துள்ளன. நில் வளா கங்கையூடாகச் செல்லும் இப்பாதையில் 12 பாலங்களும் 18 குறுக்கு வீதிகளும் 49 மதகுகளும் 23 ரயில் கடவைகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனாவின் உதவியின் கீழ் 278.2அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாத்தறையில் இருந்து சேவையில் ஈடுபட்ட ரயில் அடுத்த மாதம் தொடக்கம் பெலியத்தையில் இருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடவுள்ளது. இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
இதற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய தொடருந்து இயந்திரம் ஒன்று இணைத்துக் கொள்ளப்பட உள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இரண்டு ரயில் இஞ்சின்கள் வரவுள்ளது இதில் ஒன்று கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலும்,
மற்றைய இயந்திரம் பெலியத்தை-யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.