கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் அதிரடியாக கைது..
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சக மாணவர்களின் பகிடிவதை காரணமாக காயமடைந்த நிலையில் மாணவரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாபார முகாமைத்துவ பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வியாபார முகாமைத்துவ பிரிவில் ஆண்டில் தரத்தில் கல்வி பயிலும் மாணவனை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இருவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்து சென்று சுவரில் தலையை முட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த மாணவனுக்கு மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறிதுடன், வாந்திபேதியும் ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவனுக்கு தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் ஒரு மாதத்திற்குள் இரத்த கசிவை களைக்க வேண்டியுள்ளதாகவும், இரத்த கசிவு தொடர்ந்தும் இருந்தால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு மாணவர்களை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.