மதுபானசாலை அமைக்க 6 பொது அமைப்புக்கள் அனுமதி, மக்களின் எதிா்ப்பு பொது அமைப்புக்கள் மீது திரும்பும் அபாயம்..
ஓமந்தையிலுள்ள பாடசாலை உட்பட ஆறு அமைப்புக்கள் சம்மதக்கடிதங்கள் வழங்கியமை காரணமாக மதுவரித்திணைக்களத்தினால் ஓமந்தையில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நான் மிகவும் மனவேதனையடைகின்றேன் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் மத்தியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அம்மாச்சி உணவகம், ஓமந்தைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை திறக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுவரித்திணைக்களத்தினால் சட்டபூர்வமாக ஓமந்தைப்பகுதியில் அனுமதியளிக்கப்பட்டு மதுபான விற்பனை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கசிப்பு, கஞ்சா நடவடிக்கையினைக் கட்டுப்படுத்த மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு சம்மதக்கடிதங்கள் பாடசாலை உட்பட ஆலயம் கிராம அமைப்புக்கள் என ஆறு அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நான் வேற்று மதத்தினை வழிபட்டு வருபவன் மதுபானம் அருந்துபவனல்ல இவ்வாறு சம்மதக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வேதனையளிக்கும் சம்பவங்களாகவே என்னால் கருத முடிகின்றது.
இதேவேளை பன்றிக்கெய்த குளம் அம்பாள் வீதிக்கு அமைக்கப்பட்ட புகையிரத வேலி புகையிரத திணைக்களத்தினால் அகற்றப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள விவசாயிகளின் கால போக நெல் அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே அப்பாதையூடாக போக்குவரத்து மேற்கொள்வதற்கு விவசாயிகள் பெரிதும் துன்பங்களை அனுபவித்து வருகின்றதையடுத்து
தற்காலிகமாக அப்பாதைக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளை அகற்றி பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்க அதிபர் புகையிரதத்திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்புவதாக தெரிவித்துள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம், தமிழ் தெற்கு பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம்,
பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார், ஓமந்தை பொலிஸார், பொது அமைப்புக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.