கிராம அலுவலரைத் தாக்கிய இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஆசிரியர் - Admin
கிராம அலுவலரைத் தாக்கிய இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவிலில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடித்து யாழ். நீதிவான் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.

முறைப்பாட்டாளரின் வாக்குமூலத்துக்கு அமைவாக ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றையவர் சிசிரிவி காணொலிப் பதிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றுரைத்தனர். அதனை ஆராய்ந்த மன்று சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடித்து அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தது.

முன்னதாக, கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 2 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

அத்துடன், வண்ணார்பண்ணை வடகிழக்கு (ஜே 100) கிராம அலுவலகரை அவரது அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டியமை - அவரது அலுவலக பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை மற்றும் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வேனுக்கு தீவைத்து அடாவடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

நான்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருவருக்கும் எதிராக தலா 2 வழக்குகள் வீதம் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சந்தேகநபர்கள் இருவரும், யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியுமா? என அன்றைய தினம் மன்று கேள்வி எழுப்பியிருந்தது. சம்பவ இடங்களுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராக்களின் காணொலிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சந்தேகநபர்கள் உள்ளனர். அதனடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்" என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சிசிரிவி கமரா பதிவை நேற்று வெள்ளிக்கிழமை மன்றில் முன்வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலில் வைத்து வழக்கை ஒத்திவைத்தார். இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர். இந்நிலையிலையே சந்தேகநபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு