தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருங்கள்! சுமந்திரனின் கூற்றை நிராகரித்த சிறீதரன்...

ஆசிரியர் - Editor I
தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருங்கள்! சுமந்திரனின் கூற்றை நிராகரித்த சிறீதரன்...

சிவஞானம் சிறீதரனை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்குமாறு கேட்டேன். ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டார். இந்நிலையில் நியமன குழுவின் வேண்டுகோளுக்கு அமைவாக நானும் சிறீதரனும் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

மேற்கண்டவாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (05) தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு வவுனியாவில் கூடிய நிலையில்,

யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிறீநேசன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் பல கருத்துக்கள் வெளி வந்திருக்கின்றனவே என ஊடகவியலாளர் கேட்டபோதே அவர் மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எங்களுடைய மத்திய செயற்குழு கூட்டத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீளவும் இன்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அதற்குப் பின்னர் தேர்தலிலே தோற்றவர்கள் இந்த தடவை சந்தர்ப்பத்தை வழங்காமல் புதியவர்களை உள்வாங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த பிரிவுக்குள் பலர் அடங்குவார்கள். ஆனால் சிறிதரணை பொறுத்தவரை அதற்குள் வர மாட்டார்.

எனினும் இன்றைய கூட்டத்தில் நான் கூறியிருந்தேன் கட்சியினுடைய தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலிலே கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தினால் அவருக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்பதற்கு அப்பால் அவராகவே ஒதுங்கி இருந்தால் நல்லது என தெரிவித்திருந்தேன்.

எனினும் ஸ்ரீதரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போட்டியிடுவார்.

என்னையும் அவரையும் யாழ்.மாவட்டத்தில் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என சகல நியமன குழு உறுப்பினர்களும் கூறி இருந்தார்கள். அதற்கு அமைவாக நாங்கள் இருவரும் யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவோம். வெற்றியும் அடைவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எங்கள் இருவருக்கும் இது நான்காவது பாராளுமன்றம் எனினும் இன்னும் ஏழு பேரை நியமிக்க வேண்டும். மிகவும் ஆர்வமாக இளையவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதற்கு நாங்கள் கருத்தாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு