ஊடகவியலாளர்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தினால் உதவி

தியாகி அறக்கொடை நிதியத்தினால் ஊடகவியலாளர்களுக்கு உதவி : ஸ்ரீ லங்கா மீடியா போரத்தில் ஏற்பாட்டில் திட்டம் ஆரம்பம்
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் "ஊடகவியலாளர்கள் நாம் நேசத்தால் ஒன்றிணைவோம்! குரலற்றவரின் குரலாவோம்" எனும் தொணிப்பொருளில் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பானவு வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை(12) நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மிக்க சூழலிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டு மக்களின் செய்திகளை சமூகப் பொறுப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு செல்லும் பல்வேறு ஊடகங்களில் பிராந்திய செய்தியாளர்களாக களப் பணியாற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான " சமூகஜோதி" வாமதேவன் தியாகேந்திரன் அவர்களிடம் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களாக களப்பணியாற்றும் தெரிவு செய்யப்பட்ட இருபது (20) தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களில் முதல் கட்டமாக 10 ஊடகவியலாளர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக தலா பத்தாயிரம் ரூபாய் (10,000)வீதமும் சென்ற வருடம் இவ்வாறு ஊக்குவிப்புத் தொகையினை பெற்றுக்கொண்ட 10 ஊடகவியலாளர்களுக்கு 5000 ரூபாய் வீதமும் அன்பளிப்பு தொகை வழங்கி வைக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்ரீ லங்கா மீடியா போரம் கிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட இனங்களுக்கிடையில் பன்மைத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைவாக இவ் ஊக்குவிப்பு தொகையினை ஊடகவியலாளர்களுக்கு வழங்கும் நிகழ்வுஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மட்,ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம். நெளபர் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனின் உதவியுடன் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தினால்ஊக்குவிப்பு தொகைகள் வழங்கி வைக்கப்பட்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.