தன்னாட்சி- தற்சார்பு- தன்னிறைவு ஆகியவற்றை முன்னிறுத்தியே போட்டி - சி. வி விக்னேஸ்வரன்

ஆசிரியர் - Editor I
தன்னாட்சி- தற்சார்பு- தன்னிறைவு ஆகியவற்றை முன்னிறுத்தியே போட்டி - சி. வி விக்னேஸ்வரன்

தன்னாட்சி - தற்சார்பு - தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை விடயங்களை முன் வைத்தே தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் இன்று புதன்கிழமை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

எங்களுடைய கூட்டணி இளைஞர்களையும், அனுபவமுள்ளவர்களையும் வேட்பாளராக நியமித்துள்ளோம். நான் முன்பே கூறியது போன்று தேர்தல் அரசியலிலிருந்து விலகியுள்ளேன். 

எமது வேட்பாளர்களின் சராசரி வயது 42 ஆகும். இளம் வேட்பாளர்கள் என இவர்களைச் சொல்லலாமா என சிலர் கேட்டார்கள். 

எங்களுடைய அரச அலுவலர்கள் 60 வயது வரை வேலை செய்கின்றனர். எனவே 60 வயதுக்கு உட்பட்டவர்களும் இளையோர் தான். 

2018ஆம் ஆண்டு தொடங்கிய எமது கட்சியில் யாப்பில் தன்னாட்சி , தற்சார்பு , தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களை முன் வைத்துள்ளோம். 

அதன் அடிப்படையில் தான் எமது கட்சி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. இம்முறை தேர்தலிலும் அதனை முன்னிறுத்தியே போட்டியிடுவோம். 

எங்களின் கொள்கைகளை நாங்கள் எமது கட்சியின் யாப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் செயற்படுகிறோம். 

புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் 300 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை இருக்கிறது. 

எமது சுயநிர்ணய உரிமைகளை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு