சிவில் உடையில் சென்ற மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து வாள்களுடன் 8 பேர் கைது!

ஆசிரியர் - Admin
சிவில் உடையில் சென்ற மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து வாள்களுடன் 8 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் எட்டுப் பேரை இன்று மாலை பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர். சிவில் உடையில் சென்ற மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். 

தென்மராட்சியில் அண்மைய நாள்களில் அடாவடியில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த எட்டு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் கூறினர்

சாவகச்சேரி பொலிஸாரால் சந்தேகநபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸாரை அனுப்பி எட்டு பேரைக் கைது செய்துள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

“தென்மராட்சிப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பலின் அடாவடிகள் அதிகரித்திருந்தன. அதற்கு சாவகச்சேரி பொலிஸாரும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இன்று (04) சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து, 4 வாள்கள், கையில் பாவிக்கும் செயின்கள் உள்பட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட்யவர்கள். இவர்களில் 4 பேர் இந்த வருடம் உயர்தரம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

போலிஸ் விசாரணையின் பின்னர் சந்தேகநபர்கள் அனைவரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுத்த நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு