யாழ். மாநகர சபையில் பிரதி மேயரால் எழுந்த சர்ச்சை!

ஆசிரியர் - Admin
யாழ். மாநகர சபையில் பிரதி மேயரால் எழுந்த சர்ச்சை!

யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயரைக் கட்டி வைத்து, அடிக்க முடியாது என்று யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபை அமர்வு, மாநகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற விவாதம் ஒன்றில், எதிர்க்கட்சி உறுப்பினர் மணிவண்ணனை, விகிதாசார உறுப்பினர் என, பிரதி மேயர் விளித்தார்.

அதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பிரதி மேயர், அவருடைய கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், விகிதாசார உறுப்பினர் என ஒருவரைக் குறிப்பிட்டு கூறும் போது, இந்தச் சபையில் உள்ள 18 விகிதாசார உறுப்பினர்களையும் அது குறிக்கும் எனவும், சபை உறுப்பினர்களைக் கௌரவம் இன்றி பேச முடியாது எனவும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மேயர், அந்தக் கருத்தை, அறிக்கையில் இருந்து நீக்கி விடுவதாக அறிவித்தார். அதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் உடன்படாததோடு “பிரதி மேயர் சபையில் எழுந்து, நான் அந்தக் கருத்தை வாபஸ் பெறுகிறேன் எனக் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்கள்.

அதனையடுத்து மேயர், அக்கருத்தை வாபஸ் பெறுமாறு, பிரதி மேயரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பிரதி மேயர், தன்னுடைய கருத்தை வாபஸ் பெறப் போவதில்லையென, கூறி அமர்ந்தார். அதைத் தொடர்ந்து, சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்துக் கருத்துத் தெரிவித்த மேயர்? “என்னால் என்ன செய்ய முடியும்? பிரதி மேயர், தன் கருத்தை வாபஸ் பெற முடியாது என கூறுகின்றார். கருத்தை வாபஸ் பெறுமாறு, அவரைக் கட்டி வைத்து அடிக்கவா முடியும்?” எனக் கேட்டார்.

அதனை அடுத்து, சபையில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், இறுதியில் பிரதி மேயர் எழுந்து, தனது கருத்தை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு