வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் கருத்தை மறுத்தார் சிவஞானம்

ஆசிரியர் - Admin
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் கருத்தை மறுத்தார் சிவஞானம்

வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் பெண் அமைச்சர் கைத்துப்பாக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்த கருத்தின் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ள கருத்தில் எந்தவித உண்மையுமில்லை என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியின் போது வடக்கு மாகாணசபையின் சிறப்பு அமர்வின் போது மாகாண சபையில் அங்கம் வகிக்கும் பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

என்னுடைய சிறப்புரிமையை மீறியது மட்டுமல்லாமல் என்னை ஆயுததாரியாகச் சித்தரித்திருப்பது தொடர்பில் அயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனந்திசசிதரன் உட்பட வடக்கு மாகாணசபையில் அங்கத்துவம் வகிக்கும் பல உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு நான் தான் சிபார்சு செய்திருந்தேன். வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் தனக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அதற்கான சிபார்சை நான் வழங்கியுள்ளேன்.

ஆனால், தனக்குத் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு அனந்தி சசிதரன் என்னிடம் கேட்கவில்லை.

தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் சட்ட நடவடிக்கையெடுக்கும் உரிமை அனந்திசசிதரனுக்கு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

எனினும், இந்தவிடயத்தில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு