வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வீழ்த்துவதற்கு சதி வேலைகள் - விந்தன் கனகரத்தினம்

ஆசிரியர் - Admin
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வீழ்த்துவதற்கு சதி வேலைகள் - விந்தன் கனகரத்தினம்

தமிழ் மக்களுக்காக சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வீழ்த்துவதற்கும் அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்குமான திட்டமிட்ட சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தச் சதி முயற்சிகள் தொடர்பில எமது கட்சி விழித்துக் கொண்டதால் முதல்வருக்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடாத்திய சமகால அரசியல் நிலைமைகள் குறித்தான ஊடக சந்திப்பின் போதே விந்தன் கனகரத்தினம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

வடக்கு மாகாண சபையின் 38 உறுப்பினர்களில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 30 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையே தொடர்ச்சியாக ஒற்றுமையீனம் காணப்பட்டே வருகின்றது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை கட்சித் தலைமைகள் கவனத்திலெடுத்து ஆரம்பத்திலேயே வழி நடத்தியிருக்க வேண்டும்.

கட்சித் தலைமைகள் அவ்வாறு செய்யாததால் இன்றைக்கும் பலரும் பல வழிகளில் நின்று கொண்டு செயற்படுகின்றனர். இதனாலே இன்றைக்கு மாகாண சபையில் இக்கட்டதாதொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதிலும் குறிப்பாக மக்களுக்காகச் செயற்பட்டு வருகின்ற முதலமைச்சரை வீழ்த்த  வேண்டும் என்றும் அவரை அரசியலில் இருந்தே ஒதுக்க வேண்டுமென்றும் ஒரு தரப்பினர் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் கொண்டு வந்திருந்தனர். அவ்வாறு கூட்டமைப்பிலிருக்கின்ற தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருந்த கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ரெலோ, புளொட்,ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் முதலமைச்சருக்கு ஆதரவைத் தெரிவித்து அந்த முயற்சியைத் தோற்கடித்திருந்தனர்.

இதே போன்றே தற்போதும் முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை எதிர்க்கட்சியினர் யாரும் செய்யவில்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சியே செய்கின்றது. அதிலும் டெனீஸ்வரனின் அமைச்சர் விடயத்தில் ஆளுநர் இழைத்த தவறை முதலமைச்சர் இழைத்த தவறாக சித்தரித்து முதலமைச்சரை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு சதி நடவடிக்கைகளையும் நாம் விளங்கிக் கொண்டுள்ளோம். அதனாலே முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் முன்னெடுக்கின்ற ஒவ்வாரு நடவடிக்கைகளுக்கும் எதிராக நாம் செயற்பட்டு வருகின்றோம். ஆகவே எமக்கிருக்கின்ற குறுகிய காலத்தில் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்கோ அல்லது ஒதுக்குவதற்கோ முயற்சிக்காமல் இருக்கின்ற காலத்தில் முடிந்தவற்றை மக்களுக்குச் செய்து கொடுக்கும் வகையில் பயணிப்போம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு