SuperTopAds

ஜே.வி.பி யின் சூழ்ச்சியில் இருந்து தமிழர்களை மீட்க தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைய வேண்டும்

ஆசிரியர் - Editor II
ஜே.வி.பி யின் சூழ்ச்சியில் இருந்து தமிழர்களை மீட்க தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைய வேண்டும்

உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் நோக்குடன் வடக்கு கிழக்கின் தமிழ்க் கட்சிகள் இணைவு தொடர்பாக திறந்த மனதுடன் சந்திப்புகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியலாக உள்ளது என சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் இணைவு மற்றும் குறித்த கட்சிகளுக்கிடையிலான சந்திப்புகள் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இவ்விடயம் குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தி குறிப்பில், 

மாற்றம் எனும் கருத்தியலை முன்வைத்து ஆட்சியில் அமர்ந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கடந்த ஆறு மாதத்திற்கும் மேலான தமது ஆட்சிக் காலத்தில் பெயர் சொல்லும் வகையிலான எந்த அரசியல் மற்றும் அபிவிருத்தி நகர்வுகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வடக்கு மக்கள் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர். வடக்கு கிழக்கின் பெரும்பான்மையான சபைகளில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டு திறந்த மனதுடன் தமக்கிடையிலான இணைவு குறித்து கலந்துரையாடுவது ஆரோக்கியமான அரசியலாக உள்ளது.

நாட்டை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பின்னடைவை நோக்கி வழிநடத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொது எதிரியாக கொண்டு, அவர்களின் சூழ்ச்சி அரசியலில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க தமிழ்க் கட்சிகள் தமது இணைவை உறுதிப்படுத்த வேண்டும் என செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.