SuperTopAds

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆசிரியர் - Editor III
அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  முறைப்பாடு

சுனாமிப் பேரலை தாக்கி 20 வருடங்கள் கடந்துவிட்டது.இலங்கையில் பாதிப்புற்ற அனைத்து பிரதேசங்களிலும் பாதிப்புற்றோர்களுக்கு நியாயமான அடிப்படையில் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டுவிட்டது.குறிப்பாக சுனாமி பாதுகாப்பு எல்லைக்குட்பட்டவர்களுக்கு அந்தந்த பிரதேசங்களில் பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புக்கான வீடமைப்புக்கள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாத்திரம் நுரைச்சோலை அரச காணியில் அமைக்கப்பட்ட வீடுகளை சுனாமியால் பாதிப்புற்று வீடுகள் முழுமையாக சேதமடைந்த மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டினை செய்வதற்கு வருகைதந்த பாதிப்புற்றோர் சங்கத் தலைவர் ஐ.எல்.ஏ. குத்தூஸ்  கூறுகையில் 15 வருடங்களுக்கு முன்னர் வீடமைப்பு அமைச்சராக இருந்த திருமதி. பேரியல் அஷ்ரஃப் அவர்களுடைய அயராத முயற்சியில் எங்களுக்காக சவுதி நாட்டு நிதியினைக் கொண்டுவந்து நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்த வீடுகளை வழங்க ஆயத்தமானபோது. பேரினவாதங் கொண்ட சில இனவாதிகளாலும், இன்னும் சிலருடைய சுயநல அரசியல் இலாபங்களுக்காகவும் அக்கரைப்பற்று மக்களுக்கு இந்த வீடுகளை வழங்கக்கூடாது என திட்டமிட்டு  தடுக்கப்பட்டது. 

நடந்த அநியாயங்கள் அனைத்தையும் கண்முன்னே கண்டு அனுபவித்த நான் உட்பட பலர் அவற்றிற்கு சாட்சி என்று கண்கலங்கியவராக கூறினார்.

தொடர்ந்து கூறும்போது இதனை மேலும் தடை செய்ய சிலரால் உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், அதில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பு இருப்பதனால் வீடுகளை வழங்க முடியாதுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் முதல் உயர்மட்ட அதிகாரிகளும், மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் கூறிவருகின்றனர். 

புதிய ஜனாதிபதி அநுர குமார திசானாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று முதன்முதல் கூறியது நுரைச்சோலை வீடுகள் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று, 

அவ்வாறு கூறி ஆறு மாதங்கள் தாண்டிவிட்டது. அவர்களும் அதைச் செய்யவில்லை. இதற்கு தீர்வை யார்தான் வழங்குவது என தமது துயரை கூறினார்.

இந்த பணிகளில்  பாதிப்புற்ற மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ADALR இணைப்பாளரும், மனித எழுச்சி நிறுவனத்தின் (HEO) பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் அவர்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

அம்பாறை மாவட்டத்தில் காணி, வீட்டு உரிமைகளுக்காக நீண்டகாலமாக போராடிவரும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியில்(ADALR) தீர்வு வேண்டிய போராட்டத்தில் இணைந்திருப்பவர்களில் இப் பிரச்சினையில் பாதிப்புற்றோர்களும் உள்ளார்கள். குறிப்பாக அவர்களுடைய பிரதிநிதிகளாக அதன் தலைவர் குத்தூஸ், மற்றும் சுபைறா அவர்களுடனான பிரதிநிதிகள் முறைப்பாட்டினை இன்று ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.

இந்த உரிமைக்காக நீண்டகாலமாக ADALR பல முயற்சிகளையும் செய்து வருகின்றது.

கடந்த சுனாமி 20 ஆண்டு நினைவு நாளன்று இவர்களுடன் நானும் சென்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்தித்து எமது கோரிக்கையினை வழங்கி பேசினோம்.

அரசாங்க அதிபர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அவர்கள் என்னை கொழும்பிற்கு அழைத்து நேரில் சந்தித்து வீடுகளை வழங்குவது தொடர்பில் விசாரித்தார் என்றும், 

அதன்போது உச்சநீதிமன்ற தீர்ப்பில்  உள்ள சிக்கல்கள் தொடர்பில் பேசியதாக கூறினார்.

அதில் குறிப்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தேசிய கொள்கை அடிப்படையில் இந்த வீடுகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் உள்ள சிக்கல்களாலேயே இதனை வழங்க முடியாமல் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் தெரிவித்ததாக கூறினார்.

நிஹால் அவர்கள் மேலும் கூறும்போது, உண்மையிலேயே இலங்கையில் தேசிய காணிக் கொள்கை ஒன்று இல்லை. நாட்டு பிரஜைகளுக்கு நிலப் பிரச்சினைகள் இந்தளவு அதிகரிக்க பிரதானமான காரணிகளில் அதுவும் ஒன்றாகும். தேசிய காணிக் கொள்கையினை உருவாக்க வேண்டும் என்று  நீண்டகாலமாக பல சிபாரிசுகளை நாம் அரசுக்கு வழங்கி வந்துள்ளோம். 

கடந்த ஏப்ரல் 24ம் திகதி கல்முனைப் பிராந்தியத்திற்கு களவிஜயத்தினை மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி. கிஹாண் குணதிலக அவர்களுடைய தலைமையிலான குழுவைச் சந்தித்த எமது ADALR பிரதிநிதிகள் முன்வைத்து கலந்துரையாடிய பிரச்சினைகளில் இந்த சுனாமி வீட்டுத்திட்டம், கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வீட்டுப் பிரச்சினையினை முழுதாக கேட்டறிந்த ஆணையாளர், 

"15 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடைமுறைப்படுத்த முடியாது உள்ள தீர்ப்பு ஒன்று தொடர்பில் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை ஒன்றினை எழுதிக் கோரும் இயலுமை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உண்டு. எனவே பாதிப்புற்ற மக்களுடைய முறைப்பாடு இருக்குமிடத்து ஆணைக்குழுவால் குறித்த நடவடிக்கையை எடுக்கமுடியும்"

என தெரிவித்தார்,

அந்த அடிப்படையில், சுனாமியால் பாதிப்புற்று இதுவரை வீடுகள் கிடைக்காதவர்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் சுனாமி வீட்டுத்திட்டப் பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்களில் 78 பேர்கள் ஒப்பமிட்ட  முறைப்பாட்டினை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் இணைப்பாளர் திரு. அப்துல் அஸீஸ் அவர்களிடம் பாரமளித்துள்ளோம்.

இந்த முறைப்பாடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு விரைவாக எடுக்கவேண்டும் என்பதனையும் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம்

எனக் கூறினார்.

இந்த அடிப்படையில் பாதிப்புற்ற மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதன் மூலமாகவே நாட்டை நேசிக்கும், இனவாதமற்ற நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு இணைந்து பாடுபடும் பிரஜைகள் உருவாகுவார்கள்  என்பதை யாவரும் உணரவேண்டும்.