வரவு - செலவுத் திட்டம் கற்பனை உலகத்தைக் காட்டி வட்டி விகித உயர்வின் ஊடாக அதில் அணுகுண்டைப் போட்டுள்ளது: சஜித் பிரேமதாச
ஆசிரியர் - Editor III
வரவு - செலவுத் திட்டம் கற்பனை உலகத்தைக் காட்டி வட்டி விகித உயர்வின் ஊடாக அதில் அணுகுண்டைப் போட்டுள்ளது: சஜித் பிரேமதாச
அம்பாறையில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் கடும் விமர்சனம்
பணவீக்கம் 9 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி ஆளுநர் அறிவித்துள்ள நிலையில், வட்டி விகிதமும் 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வரவு - செலவுத் திட்டத்தினூடாகக் கற்பனை உலகமொன்றைக் காட்டிய அரசாங்கம், வட்டி விகித உயர்வின் மூலம் அந்தக் கற்பனை உலகின் மீது அணுகுண்டைப் போட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் (சமகி ஜன பலவேகய) அம்பாறை அமைப்பாளரும் சட்டத்தரணியுமான லயனல் குணசேகர மஹாகா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த முக்கிய கருத்துக்கள் வருமாறு:
விவசாயியின் மகன் எனக் கூறி அதிகாரத்திற்கு வந்தவர்கள், இன்று நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளை மிகவும் உதவியற்ற நிலைக்குத் தள்ளியுள்ளனர். வட்டிக்குக் கடன் பெற்றுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குத் தரமான விதைகள், உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. உர மானியப் பணமும் போதுமானதாக இல்லை.
ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா வழங்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், விவசாய அமைச்சரின் கணிப்பீட்டின்படி ஒரு கிலோ நெல் உற்பத்திச் செலவு 137 ரூபாவாக இருக்கும் நிலையில், உத்தரவாத விலையாக 120 ரூபாவை மாத்திரமே நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா நஷ்டத்தை அரசாங்கம் வேண்டுமென்றே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது அரிசி இறக்குமதிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், இன்று நாட்டில் அரிசி உபரி காணப்படுகின்ற போதிலும் வெளிநாடுகளிலிருந்து பெருமளவு அரிசியை இறக்குமதி செய்துள்ளனர். நாட்டுக்குத் தேவைப்படுவது விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்தி, அரிசி இறக்குமதியை முற்றாகத் தவிர்க்கும் வகையிலான 'தேசிய சாகுபடித் திட்டமே' தவிர, விவசாயிகளை ஏமாற்றும் அரசாங்கம் அல்ல.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளையும் விட அதிகளவான வரிகளைத் தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது சுமத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் மக்கள் தமது தங்க நகைகளை அடகு வைக்கும் நிலைமை நாட்டில் அதிகரித்துள்ளதுடன், குழந்தைகளுக்குச் சத்தான உணவைக் கூட வழங்க முடியாத துயர நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான இடமளிக்காது, ஜனநாயக விரோதப் போக்குடன் செயற்படுகின்றது. கடந்த காலங்களில் தாம் பள்ளி மாணவிகளுக்கு இலவச சுகாதார வசதிகளை வழங்கியபோது அதனை விமர்சித்து அவமதித்தவர்களே, இன்று அதே திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உரையில் மேலும் தெரிவித்தார்.