SuperTopAds

பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விழிப்புணர்வுச் சுவரொட்டி யாழில் வெளியீடு

ஆசிரியர் - Editor II
பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விழிப்புணர்வுச் சுவரொட்டி யாழில் வெளியீடு

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டுத் திட்டத்திற்கான விழிப்புணர்வுச் சுவரொட்டி வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் குறித்த விழிப்புணர்வுச் சுவரொட்டி உத்தியோகபூர்வமாக வெளியிட்டு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.  

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டின் ஓர் அங்கமாக இவ்வாண்டும் குறித்த விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாண்டின் கருப்பொருளாக “நீதியே எனது உரிமை” (Justice is My Right) என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இச்செயற்பாடு எடுத்துரைக்கின்றது.

இதற்கமைய, வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், கிராமங்கள் மற்றும் சமூக மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, துன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வன்முறைகள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல், வன்முறைகளைத் தடுப்பதற்கான சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்துதல், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு மற்றும்  உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள்  ஆகியன இச்செயற்பாடுகளின் முக்கிய நோக்கங்களாகும்.

மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துவதற்கும், வன்முறையற்ற சமத்துவமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அரச நிறுவனங்கள், பாடசாலைகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கூட்டு ஒத்துழைப்புடன் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர்களான கே. ரமணஸ்கந்தா, P. றொனிபஸ், கே. அகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Radio