SuperTopAds

யாழ்ப்பாணத்தில் 2027ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள மகளிர், சிறுவர் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

ஆசிரியர் - Editor II
யாழ்ப்பாணத்தில் 2027ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள மகளிர், சிறுவர் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்  சரோஜா சாவித்திரி போல் ராஜ்  தலைமையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மாவட்ட உபகுழுக் கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக 2027ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் செயற்பாட்டுச் சங்கங்களை 'சமூக சக்தி' வேலைத்திட்டத்துடன் எவ்வாறு இணைத்துச் செயற்படுத்துவது என்பது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதற்கும், பெண்களைச் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளில் அதிகளவில் பங்கேற்கச் செய்வதற்கும் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அதேபோன்று, சிறுவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் முழுமையான ஆளுமை விருத்தியை உறுதிப்படுத்தும் வகையில் 2027ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, நன்னடத்தைப் பராமரிப்பு நிலையங்களின் கீழ் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கான விசேட நலத்திட்டங்கள், அவர்களின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளின் கருத்துக்களும் முன்மொழிவுகளும் கேட்டறியப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான புதிய திட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான முன்மொழிவுகளை அமைச்சுக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

Radio