நுவரெலியாவில் தம்பதியினர் உறக்கத்தில் உயிரிழப்பு ! BBQ அடுப்பு காரணம் ?!

நுவரெலியா, மீப்பிலிமனாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், அறைக்குள் எரிந்துகொண்டிருந்த பார்பிக்யூ (BBQ) அடுப்பிலிருந்து வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளையைச் சேர்ந்த 52 வயதுடைய கப்பல் கப்டனும் அவரது 46 வயது மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.
மீப்பிலிமனாவில் சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணித்து வந்த இவர்கள், கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.
பார்பிக்யூ உணவைத் தயாரித்து உண்ட பின்னர், அப்பகுதியில் நிலவிய கடும் குளிர் காரணமாக அடுப்பை அணைக்காமல் அறைக்குள் வைத்துவிட்டு இருவரும் உறங்கச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை உறவினர்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளுக்கு இருவரும் பதிலளிக்காததால், அப்பகுதி கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்குச் சென்று பார்வையிட்ட கிராம அலுவலர், தம்பதியினர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பார்பிக்யூ அடுப்புகளில் பயன்படுத்தப்படும் கரி முழுமையாக எரியாதபோது, நிறமற்றதும் மணமற்றதுமான கார்பன் மோனாக்சைடு வாயு வெளியாகக்கூடும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மூடிய அறைகளில் இவ்வாயு தேங்குவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பார்பிக்யூ அடுப்புகளை அறைக்குள் பயன்படுத்துவதையோ, குளிருக்காக எரியும் அடுப்பை உள்ளே வைத்துக்கொண்டு உறங்குவதையோ தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்




