அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் பாரிய காற்று -போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் பாரிய காற்று -போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்
கடும் காற்று காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இன்று(17) மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மக்கள் குடியிருப்புக்கள் வியாபார நிலையங்கள் என பலதும் சேதமடைந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
மேலும் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று , உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்றும் மழையும் திடிரேன பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் தற்போதைய காலநிலை மாற்றமானது சிறுவர் முதல் பெரியோர் வரை பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.றியாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய காலநிலை மாற்றம் குறித்து எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிற்கு தெரிவிக்கையில்
அம்பாறை மாவட்டத்தில் அடிக்கடி திடீரென பலத்த காற்று மழை ஏற்பட காலநிலை மாற்றமே காரணமாகும். எல்-நினோவின் தாக்கம் இலங்கைக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இதன் தாக்கம் காரணமாக இடையிடையே மழை ஏற்படுவதுடன் பாரிய காற்றும் 10 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கிறது. இது தவிர அதிக வெப்பம் நிலவுவதுடன் வழமையை விட இன்று மாத்திரம் பாரிய காற்று வீசியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறிப்பிட்ட ஒரு நேர காலத்திற்குள் இவ்வாறான பாரிய காற்று இடையிடையே மழை வீழ்ச்சி என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.எனவே தற்போது பாரிய காற்று வீசுவதனால் வீடுகளில் உள்ளவர்கள் கடை வைத்திருப்பவர்கள் முன்னேற்பாடான நடவடிக்கையில் ஈடுபடுமாறும் தற்போது வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக வயல்வெளிகளில் வேலை செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பினால் சிறுவர்கள் நீராகாரங்களை உட்கொள்கொள்ளுமாறும் வெளியே அநாவசியமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வயல்வெளிகளில் நீண்ட நேரம் வயல்வேலைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.