யாழ்.வன்முறை: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அதிரடிக் கருத்து!

ஆசிரியர் - Admin
யாழ்.வன்முறை: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அதிரடிக் கருத்து!

யாழ்.குடாநாட்டில் தற்போது அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் இந்தப் பிரச்சினைகளை எங்களுடைய இளைய சமூகம் கையிலெடுக்க வேண்டும். இழந்த எங்களுடைய பெருமையை நாங்கள் மீண்டும் நிலைநாட்ட வேண்டுமெனில் எங்களுடைய சமூகம் ஒட்டுமொத்தமாக விழிப்புணர்வடைய வேண்டியது அவசியமாகும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா-2018 நேற்றுச் செவ்வாய்க்கிழமை(17) வித்தியாலயப் பிரதான மண்டபத்தில் அதிபர் இ.பசுபதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது யாழ்.குடாநாட்டில் கட்டிளமைப் பருவத்திலுள்ள மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை என்பது பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எங்களுடைய வீடுகளுக்கு யார்? எப்போது ? வாள்களுடன் வருவார்கள் எனத் தெரியாத நிலையில் தான் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது மாகாணசபை உறுப்பினரொருவருடைய வீட்டுக்குள் சிலர் புகுந்து சுமார் ஒரு மணிநேரமாக நின்று அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை முடித்த பின்னர் வெளியேறியிருக்கிறார்கள்.

முன்னர் ஆயுதம் வைத்திருந்த இராணுத்தினரே வன்முறைகளுக்குக் காரணமெனப் பகிரங்கமாகவே கூறியிருந்தோம். ஆனால், தற்போது எங்களுடைய தமிழ் இளைஞர்களே வாள்வெட்டுப் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது மிகவும் வேதனை தரும் விடயமாகும்.

ஒரு சிறியதொரு விடயத்தையேனும் நாங்கள் முரண்பாடாக மேற்கொண்டால் சட்டத்துக்கு அல்லாமல்சமூகத்திற்கு அஞ்சுகின்றதொரு காலமிருந்தது. நாங்கள் சிறுதவறையேனும் செய்து விட்டால் எங்களைச் சார்ந்த உறவுகள் அல்லது அயலவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதான ஒரு மனப்பயம் எங்களுக்கிருந்தது. இந்த உணர்வு தான் எங்கள் சமூகத்தை நல்வழிப்படுத்தியிருக்கிறது.

இத்தகைய சமூகப் பயம் தற்போதைய எமது சமூகத்தினர் மத்தியில் இல்லாமல் போனமை துரதிஷ்டவசமானது. இதற்கு நாமனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.

உலக வரலாறுகளில் யுத்தம் நடைபெற்று முடிவடைந்ததற்குப் பின்னர் இளைய சமூதாயத்தை, அதுவும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து இவ்வாறான சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகமாகக் காணப்படுவது இயல்பானது.

சமூகத்தைச் சீரழிப்பதற்கு மாணவர்களே முதலில் இலக்கு வைக்கப்படுகிறார்கள். இதன்மூலம் சமூகத்தை இலகுவாகச் சீரழித்து விடலாம் என்பது யதார்த்தமானதும் கூட. அந்த வகையில் தான் யாழ்.குடாநாட்டிலும் மாணவர்களை இலக்குவைத்துத் தொடர்ந்தும் பல்வேறு வேண்டத்தகாத செயல்கள் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களுக்கு எப்போதுமே பழைய பெருமைகளைப் பேசுவதில் மகிழ்ச்சி அதிகம். பாடசாலை மட்டத்தில் எடுத்து நோக்கினால் அந்தப் பாடசாலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அதிபராகவிருந்த அதிபரின் பெருமையையே தற்போதும் பேசிக் கொண்டிருப்போம்.

ஒரு நாடு அல்லது ஒரு இனம் சார்ந்து சொல்லுகின்ற போது கடந்த 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்னரிருந்த தலைமை சிறப்பாகவிருந்தது. எங்களைப் பொறுத்தவரை கடந்த-2009 ஆம் ஆண்டுக்கு முன்னரிருந்த தலைமை சிறப்பாகவிருந்தது என்றெல்லாம் சொல்கிறோம்.

வெறுமனே பழைய பெருமைகளை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பதால் பலனென்ன? காவல்துறையே எங்கள் சமூகத்தில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டும் ஏன் கண் மூடியிருக்கிறாய்? என நாம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? தென்னிலங்கையிலிருந்து இங்கு வருகை தந்துள்ள காவல்துறையினருக்கு கிராமங்கள், ஒழுங்கைகள் எல்லாம் தெரியுமா? என்ற கேள்வியும் எழுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு