ராஜித சேனாரத்னவின் நடவடிக்கையால் வடக்கு வைத்தியசாலைகளுக்கு பல்வேறு உதவிகள்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடனும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடனும் அண்மையில் வடமாகாண மருத்துவர் மன்றம் மற்றொரு சந்திப்பை நடத்தியிருந்தது.
இச்சந்திப்பின் போது பல்வேறு உதவிகளை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் ஆதித்தனை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நியமிக்க அமைச்சர் ராஜித உறுதியளித்துள்ளார்
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் டிப்ளோமா கற்கைநெறிக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடி
சம்மதத்தைப் பெறுவதன் மூலம் டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல் மருத்துவ பீடாதிபதிக்கு வழங்கப்படுமென அமைச்சர் ராஜித உறுதியளித்தார்.
இணுவில் சிறுவர் வைத்தியசாலை காணி கையகப்படுத்தப்பட்டு சுற்றுமதில் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதுடன்,
கட்டிடத்தைக் கட்டுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென இங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இறுதியாக வெளியேறிய 287 தாதியரை வடகிழக்கு மாகாணத்திற்கு மட்டும் நியமிப்பதற்கு அமைச்சர் ராஜித நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை,
இதன்மூலம் வடகிழக்கில், அரச வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறை உடனடியாக நீங்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதைவிட மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பொது வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதெனவும் மன்னார் மற்றும்
கிளிநொச்சி பொது வைத்தியசாலைகளுக்கு விரைவில் சி.ரி. ஸ்கானர்கள் வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன், மன்னார்
வைத்தியசாலைக்கு விரைவில் மயக்கமருந்து நிபுணரை நியமிப்பதற்கும் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடனும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடனும் அண்மையில் வடமாகாண மருத்துவர் மன்றம்
மற்றொரு சந்திப்பை நடத்தியிருந்தது. அம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்களென 250 வாகனங்களை வடக்கின் சுகாதாரத்துறைக்கு வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன்
முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு மருத்துவ விடுதி கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதைவிட அடுத்த மாதம் 14 ஆம் திகதி அமைச்சர் ராஜித சேனாரத்ன
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து விளையாட்டு மருத்துவப் பிரிவுக்கான உபகரணங்களையும் என்பு முறிவு சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
வடபகுதி மருத்துவத் துறைக்கு வடமாகாண மருத்துவர் மன்றம் கடந்த சில வருடங்களாக பெரும் பணியாற்றிவருவதை பாராட்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன
இவர்களூடாக தொடர்ந்தும் வடபகுதி மருத்துவத்துறையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.