யாழ். குப்பிளானில் திருடப்பட்ட தங்கநகைகள் மீளவும் கிடைத்தது: பிள்ளையாரின் அருள் தான் காரணமா!!

ஆசிரியர் - Admin
யாழ். குப்பிளானில் திருடப்பட்ட தங்கநகைகள் மீளவும் கிடைத்தது: பிள்ளையாரின் அருள் தான் காரணமா!!

யாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயமொன்றிற்குச் சென்றிருந்த ஓய்வு நிலை ஆசிரியையொருவரின் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட நிலையில் இரு தினங்களில் குறித்த தங்கநகைகள் மீளவும் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் தற்போது குப்பிளான் பகுதியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகப் பெருமான் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பமாகித் தற்போது இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் ஆலய மஹோற்சவத்தின் மூன்றாவது நாளன்று அதேபகுதியைச் சேர்ந்த ஓய்வுநிலை ஆசிரியையொருவர் வழமை போன்று காலை உற்சவத்தில் கலந்து கொண்டார்.

வீட்டில் யாருமில்லாத காரணத்தால் குடும்பப் பெண்மணியான குறித்த ஓய்வுநிலை ஆசிரியை பாதுகாப்புக் கருதித் தனது தங்க நகைகள் முழுவதையும் கைப்பையில் கழற்றி வைத்து அந்தக் கைப்பையைத் தன்னுடனேயே வைத்திருந்துள்ளார்.

அன்றைய தினம் காலை உற்சவத்தை நிறைவு செய்த பின்னர் குறித்த ஓய்வுநிலை ஆசிரியை ஆலய மணிமண்டபத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். இதன் போது தங்கநகைகளுடன் கூடிய தனது கைப்பையையும் குறித்த குடும்பப் பெண் தன்னுடன் கூடவே எடுத்துச் சென்றிருந்தார்.

வயிறார உணவுண்ட பின்னர் குறித்த ஓய்வுநிலை ஆசிரியை கைகழுவுவதற்காக வெளியே சென்றுள்ளார். ஓரிரு நிமிடங்களில் வந்து பார்த்த போது தான் அமர்ந்து உணவுண்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளுடன் கூடிய கைப்பையைக் காணாது ஆச்சரியமடைந்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த குறித்த பெண்மணி இந்த விடயம் தொடர்பில் அங்கு நின்றவர்களிடம் கவலையுடன் எடுத்துக் கூறியுள்ளார். எங்கு தேடியும் காணாமற் போன நகைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பெறுமதியான நகைகள் காணாமற் போனமையால் மனமுடைந்த குறித்த ஓய்வுநிலை ஆசிரியை சொக்கவளவு சோதிவிநாயகப் பெருமானைத் தொடர்ந்தும் மனமுருகி வழிபட்டுள்ளார்.

இந்நிலையில் நகைகள் திருட்டுப் போன மூன்றாவது நாளில் ஆலயப் பிரதமகுரு வழமை போன்று ஆலயப் பரிவார மூர்த்திகளுக்குப் பூசை நிகழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் பரிவார மூர்த்தியொன்றின் சந்நிதானத்திற்கு முன்பாகத் திருட்டுப் போன நகைகள் கைப்பையுடன் காணப்பட்டுள்ளமையைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக இந்தவிடயம் தொடர்பில் ஆலயப் பிரதம குரு ஆலய பரிபாலன சபையினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த ஓய்வுநிலை ஆசிரியை ஆலயத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆலய பரிபாலன சபையினரின் முன்னிலையில் ஆலயப் பிரதம குருவான குருக்கள் ஐயாவால் தங்கநகைகள் பத்திரமாகக் கையளிக்கப்பட்ட்டுள்ளன. திருட்டுப் போன தனது தங்கநகைகள் மீளவும் கிடைத்துள்ளமையால் நகை உரிமையாளரான பெண்மணி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தங்கநகைகளைக் கண்டெடுத்து மீளவும் தன்னிடம் ஒப்படைத்த ஆலயக் குருக்கள் ஐயாவுக்கும்,ஆலய பரிபாலன சபையினருக்கும் தனது நன்றிகளை அவர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

அதெல்லாம் சரி எத்தனை பவுண் தங்கநகைகள் திருட்டுப் போன நிலையில் மீளவும் கிடைத்துள்ளது தெரியுமா? 12 பவுண் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு