யாழ். குப்பிளானில் வெளிநாட்டிலிருந்து வந்தவரின் வீட்டை இலக்கு வைத்துக் கொள்ளை

ஆசிரியர் - Admin
யாழ். குப்பிளானில் வெளிநாட்டிலிருந்து வந்தவரின் வீட்டை இலக்கு வைத்துக் கொள்ளை

யாழ்.குப்பிளான் தெற்குப் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குடும்பப் பெண்மணியை இலக்கு வைத்துக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த வீட்டில் தங்கநகைகள்,பணம் எதுவும் காணப்படாமையால் கொள்ளையர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனினும், வீட்டுக்கு வெளியே கிணற்றடியில் மிகவும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் குறித்த குடும்பப் பெண்மணி கிராமத்து ஆலயமொன்றின் திருவிழாவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார். இந்நிலையில் குறித்த குடும்பப் பெண்மணி இரவு முழுவதும் தனது வீட்டுக்குச் சற்றுத் தூரத்திலுள்ள நெருங்கிய உறவினர் வீட்டில் தங்கி நின்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தனது உறவினரின் நெருங்கிய வீட்டில் தங்கியிருந்து விட்டு நேற்றுக் காலை(26) தனது வீட்டிற்குச் சென்று பார்த்த போது கிணற்றடியில் மிகவும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் இயந்திரம் களவு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் வீட்டினுள்ளே அமைந்திருக்கும் ஏனைய கதவுகளும் இதன் போது உடைக்கப்பட்டுக் காணப்பட்டதுடன் ஓடு பிரித்துக் கொள்ளையர்கள் வீட்டினுள்ளே இறங்கியமைக்கான அடையாளங்களும் காணப்படுவதாக வீட்டின் உரிமையாளரான பெண்மணி இன்று எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

அத்துடன் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் உடைத்தெடுத்துச் செல்லப்படவில்லை எனவும் கொள்ளையர்களால் கழற்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து குறித்த குடும்பப் பெண்மணி வருகை தந்துள்ளமையை நோட்டமிட்டே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளதுடன் வீடு முழுவதும் சல்லடையிட்டுத் தேடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குப்பிளான் தெற்குப் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அடுத்தடுத்துப் பசுமாடுகள் திருட்டுப் போயிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு