SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்கள் உச்சம்! கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் விரிவுபடுத்துகிறார் - யாழ்.மாவட்டச் செயலர்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்கள் உச்சம்! கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் விரிவுபடுத்துகிறார் - யாழ்.மாவட்டச் செயலர்...

யாழ்ப்பாணம் தொடர்பாகவும், யாழ்ப்பாண இளம் சமுதாகம் தொடர்பாகவும் தென்பகுதியில் உள்ள எமது நண்பர்கள் பேசுகின்றபோது வியப்பாகவும் அதேவேளை கவலையாகவும் உள்ளது என கூறியுள்ள யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், 

மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட நடவடிக்கை எடுக்கப்படுகிறது, அதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

யாழ்.மாவட்டத்திலுள்ள வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசிப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 

நாட்டில் இருக்கின்ற தேசிய பத்திரிகைகள் எதனை எடுத்தாலும் யாழ்.மாவட்டத்தின் குற்றச்செயல்கள் தொடர்புடைய செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன, பெற்றோர்கள் அதில் கவனம் எடுக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எங்கே செல்கின்றார்கள், என்ன செலவு செய்கின்றார்கள், எங்கிருந்து காசு வருகின்றது போன்ற விடயங்களை கவனம் செலுத்த வேண்டும். 

நீங்கள் உங்களுடைய பிள்ளைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய குடும்பம் மட்டுமல்ல உங்களுடைய கிராமம் மட்டுமல்ல இந்த நாடு சீரழிந்து போகின்ற நிலைமை ஏற்படும். நாங்கள் போலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரோடு கலந்துரையாடல்கள் மேற்கொண்டு இருக்கின்றோம். 

எங்களுடைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தா இது சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி விசேட வேலை திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றார். அது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று மிக விரைவில் நடைபெற இருக்கின்றது. 

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த குற்ற செயல்களை எவ்வாறு தடுப்பது, இதில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபடுபவர்களை எவ்வாறு இனம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக வேலை திட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நிலைமைகளை நாங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோமாக இருந்தால் இயல்பாகவே எங்களுடைய கிராமங்களிலே, எங்களுடைய நகரங்களிலே குற்றச்செயர்கள் குறையும். இந்த மாவட்டத்தினுடைய கௌரவம் காப்பாற்றப்படும் யாழ்ப்பாண மண்ணுக்குரிய கௌரவமும் பெருமையும் மதிப்பும் பேணப்படும் உங்களுடைய வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமையும்.

ஆனபடியால் உங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். என்னிடம் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். வறுமையில் வாடுகின்ற குடும்பங்களில் இருந்து தான் போதைவஸ்து பாவிப்பவர்கள் வருகின்றார்களாக இருந்தால் அவர்களுடைய குடும்பத்தை போய் பார்த்தால் அங்கே வறுமையாக இருக்கின்றது, அங்கே வசிப்பதற்கு கூட போதிய இடம் இல்லாமல் இருக்கின்றார்கள் என சொல்லுகின்றார்கள். 

ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுகின்றார்கள் என சொல்லுகின்றார்கள், ஆனால் ஒருநாள் போதைவஸ்து பாவிப்பதற்கு 15,000 வரைக்கும் அந்த குடும்பத்தவர்கள் செலவழிக்கின்றார்களாக இருந்தால் அந்தக் பணம் எங்கிருந்து வருகின்றது இது பற்றி ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை? இதற்குப் பின்னால் இருக்கின்ற ரகசியங்கள் என்ன என்பதைப் பற்றி யார் கவலைப்படுகிறீர்கள்?

அவ்வாறானால் அந்த குடும்பம் வறுமையான குடும்பமா? அந்தப் பையனுக்கு அல்லது அந்த பெண்ணுக்கோ எங்கிருந்து காசு கிடைக்கிறது? இவை போன்ற கேள்வியை நீங்கள் எழுப்ப வேண்டும் இதில் மிக கவனம் செலுத்த வேண்டும். இது சம்பந்தமாக உரிய தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும். 

உங்களுடைய பிரதேசங்களில் இவ்வாறான குற்றச் செயல்களை ஈடுபடுபவர்களை நீங்கள் இனம் கண்டு உரியவர்களுக்கு அறிவிக்க வேண்டும். உங்களுடைய கிராம உத்தியோகத்தர் இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். 

ஆகக்குறைந்தது அவர்களுக்காவது அல்லது போலிஸாருக்கு அல்லது பிரதேச செயலகத்துக்கு அல்லது சமூக சேவை உத்தியோகத்திற்கு யாருக்காவது இந்த தகவல்களை தெரிவித்து உங்களுடைய கிராமங்களில் இந்த குற்றங்களை செய்வவர்கள் வராதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். 

அப்போதுதான் நீங்கள் நிம்மதியான, ஆரோக்கியமான, சிறந்த சமுதாயத்தில் உள்ளவராக நீங்கள் மாற முடியும் என இவ்விடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.