SuperTopAds

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் விமான சேவை! யாழ்.இந்திய துணை துாதுவர்...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் விமான சேவை! யாழ்.இந்திய துணை துாதுவர்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை இந்தியாவில் ஏனைய நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக யாழ்.இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரன் தெரிவித்தார். 

நேற்று புதன்கிழமை யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற வடமாகாண மகளிர் விவகார அமைச்சும் யாழ்.இந்தியாத் துணை தூதரகமும் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் தமிழ் நாட்டுக்குமான சேவைகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. விமான நிலையத்தின் சுகவைகள் ஆரம்பித்த பின்னர் இந்தியாவிலிருந்து பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.

யாழ்.மாவட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் அன்பளிப்புச் செய்த கலாச்சார மண்டபத்தில் தொடர்ச்சியாக நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம். நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்.இந்தியத் துணை தூதரகத்தால் இந்தியாவின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் பங்கு பற்றிய சிறப்பு பட்டிமன்றம் இந்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கும் தொப்புள் கொடி உறவான தமிழக மக்களுக்கும் இடையிலான கலை கலாச்சாரங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக அமையும்.

ஆகவே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் செயற்பாடுகளை இந்தியாவில் உள்ள ஏனைய நகரங்களுக்கும் விமான சேவையை விரிவுபடுத்தும் திட்டங்கள் ஆராயப்பட்டுவருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.