SuperTopAds

பயங்கரவாத தடைச்சட்டமும் அதன் விளைவுகளும் எமக்கு புதிதல்ல!! தெற்கில் நல்லெண்ணத்தை காட்டுங்கள், பரிசீலிக்கலாம்..

ஆசிரியர் - Editor I
பயங்கரவாத தடைச்சட்டமும் அதன் விளைவுகளும் எமக்கு புதிதல்ல!! தெற்கில் நல்லெண்ணத்தை காட்டுங்கள், பரிசீலிக்கலாம்..

தமிழ் மக்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல எனத் தெரிவித்த யாழ்.பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுடைய பிரச்சனை தொடர்பில் தெற்கில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால் இணைந்து செயல்படுவது தொடர்பில் பரிசீலிப்போம் என தெரிவித்தார். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிய தலைமையிலான குழுவினர் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயல்பாடுகளுக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆதரவை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அது மட்டுமல்ல அனைத்து பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கெடுப்பதில்லை எனவும் கூறப்பட்டது. 

அவர்களுக்கு நாம் தெளிவான ஒரு கருத்தை முன் வைத்தோம் தமிழ் மக்கள் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் எனப் பல வருட காலமாக கோரிய போதும் குறித்த சட்டம் நீக்கப்படாது தமிழ் மக்களை அடக்குவதற்காக பிரயோகிக்கப்பட்டது.

ஆதலால் தமிழ் மக்கள் பயங்கரவாத தடை சட்டத்துக்கு பழகிப்போன நிலையில் அதை நாம் பெரிய விடயமாக கருதவில்லை. 

தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற நிலையில் அதனை தென் இலங்கையை நோக்கி எடுத்த செல்வதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்க வேண்டும் என கேரிக்கை முன்வைத்தாம்.

இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்கு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தம் ஒரு காரணமாக விளங்குவதை ஏற்றுக் கொள்கிறீர்களா என கேட்டோம் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆகவே தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தென் இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்க முன்வருமானால் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கெடுப்பது தொடர்பில் பரிசீலிப்போம் என அவர்களிடம் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.