யாழ்.மாவட்ட மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! மோட்டார் சைக்கிள்களில் ஆவணங்கள், பெறுமதியான பொருட்களை வைத்திருக்கவேண்டாம்...
யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயல்படுமாறு மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரியால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி புத்தூர் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் நேற்றுமுன்தினம் திருடப்பட்டுள்ளது. வயோதிபர்கள் இருவர் வசித்து வரும் நிலையில் ஆசிரியர் ஒருவர் அந்த வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஓட்டும் மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
அதேபோல் நாச்சிமார் கோவில் பகுதியில் ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் அவரது வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிள் இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் உப்புமடம் கோண்டாவில் பகுதியில் வியாபார ஸ்தலத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலாளி ஒருவரின் மோட்டார் சைக்கிள் இரவு நேரம் திருடப்பட்டு உள்ளது.
காவலாளி தூங்கிக் கொண்டிருந்த நேரம் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல் கோப்பாய் பகுதியிலும் மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது.
பூட்டப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஒருவர் எடுத்து செல்ல மற்றவர் அதனை தள்ளிக் கொடுத்து எடுத்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் துரத்தி சென்ற பொழுதும் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வழிப்பறி கொள்ளைக்காக இந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் மோட்டார் சைக்கிள்களுக்கு கேண்டில் பூட்டு போட்டு பாதுகாப்பாக வீட்டில் நிறுத்தி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் இருந்து ஆவணங்கள், கைத் தொலைபேசிகள் திருட்டு புத்தூர் சாய்பாபா கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெறுமதியான இரண்டு கை தொலைபேசிகள் உட்பட
உடைமைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் இரண்டு கைபேசிகள், ஏ.ரி.எம் அட்டை, அடையாள அட்டை
மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட 2000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.