SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைகிறது! 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - ஆறு திருமுருகன் எச்சரிக்கை...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைகிறது! 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - ஆறு திருமுருகன் எச்சரிக்கை...

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்கின்ற நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எச்சரிக்கை விடுத்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ் உரும்பராயில் இடம் பெற்ற ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தில் பல பாடசாலைகள் மாணவர் இன்மையால் மூடப்பட்டுள்ளது அதே போன்று வலிகாமம் கிழக்கில் இரண்டு பாடசாலைகள் அண்மையில் மூடப்பட்டுள்ளது. பாடசாலை மூடுவதற்கு மாணவர்கள் இன்மை எனக் காரணம் கூறப்பட்டாலும் யாழ் மாவட்டத்தில் தனியார் பாடசாலைகள் முளைத்த வண்ணம் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த கல்லூரிகளில் ஒன்றாக திகழ்ந்த உரும்பிராய் இந்து கல்லூரி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் உலகளாவிய நீதியில் உயர் பதவிகளை வகித்துள்ளனர். 

இன்றும் தொடர்ந்தும் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் செல்கின்ற நிலையில் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு செல்லவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஐந்துக்கும் குறைவாகவே உள்ளது.இலங்கையிலுள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் முஸ்லிம்களுடைய அறக்கட்டளை நிறுவனங்களே அதிகம் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்தபோது முஸ்லிம் அமைப்புகள் சார்ந்து இயங்குகின்ற பெரும்பாலான அறக்கட்டளை நிறுவனங்களை இலங்கை பாராளுமன்றத்தில் பதிவு செய்துவிட்டார்.முஸ்லிம்கள் சார்ந்து இலங்கையில் மட்டுமல்ல உலகத்திலும் தனியான பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றது. 

ஆனால் தமிழ் மக்கள் சார்ந்து எந்த ஒரு பல்கலைக்கழகமும் இயங்கவில்லை. ஆகவே பொறப்பு வாய்ந்தவர்கள் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றாவிட்டால் எமது இனத்தின் பரம்பல் குறைந்து கொண்டு செல்வதுடன் எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை தமிழ் மக்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.