பொலிஸ் துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கா?: யாழ். மல்லாகம் மக்கள் சரமாரிக் கேள்வி

ஆசிரியர் - Admin
பொலிஸ் துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கா?: யாழ். மல்லாகம் மக்கள் சரமாரிக் கேள்வி

மல்லாகம் சகாய மாதாத் தேவாலயத் திருவிழாவில் குழப்பம் ஏற்படுத்த முயன்றவர்களைத் தட்டிக் கேட்டது எந்தவகையில் தவறாகும்? எனக் கேள்வியெழுப்பியுள்ள மல்லாகம் குளமங்கால் பகுதி மக்கள் குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்காகவா பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்?எனவும் சரமாரிக் கேள்வியெழுப்பியுள்ளனர்.

யாழ். மல்லாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) இரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தரொருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரான பாக்கியராசா சுதர்சனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(19) பிற்பகல் யாழ்.மல்லாகம் குளமங்கால் பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் நாம் சிறுபான்மையாகவுள்ளோம் என்ற ஒரேயொரு காரணத்தால் நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்பட்டு வந்தோம். இந்த அடக்குமுறையின் தொடர்ச்சியாகவே எமது பகுதியைச் சேர்ந்த அப்பாவி இளைஞர் சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தரொருவரால் விசாரணைகள் எதுவுமின்றி வீதியில் வைத்து மிருகங்களைச் சுடுவது போன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் கருதுகிறோம்.

துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காமல் சூடுபட்டு நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞனை வைத்தியசாலையில் கொண்டு சேர்ப்பித்தவர்களை மட்டும் கைது செய்தது ஏன்? இதுவரை சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படாமைக்கான காரணம் தானென்ன?

கொழும்புக்கு ஒரு சட்டம்,யாழ்ப்பாணத்தில் வேறொரு சட்டமும் என்ற நிலை தொடர்வதற்கு நாம் இடமளிக்க முடியாது. துப்பாக்கி மூலம் அநியாயமாக ஒரு மனித உயிரைப் பலியெடுத்ததுடன் மாத்திரம் நின்றுவிடாது தாம் செய்வது தான் சரியெனப் பொலிஸாரும், அரசாங்கமும் எண்ணம் கொண்டிருந்தால் அப்படியானதொரு அரசாங்கம் எமக்குத் தேவையில்லை.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுப் பலநாட்களாகியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தாமலிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து எம்மைக் கொல்வதாகவே நாம் கருத வேண்டியுள்ளது எனவும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு