இனத்தின் விடுதலைக்காக உழைப்பவர் யார்? தீர்மானிக்கும் காலம் இது, தீர்மானிக்கவேண்டியது மக்கள்...
இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் காலம் மக்கள் கைகளில் உள்ளது. அவர்களே முடிவெடுப்பார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தி மக்கள். அவர்கள் யார் வேண்டும், வேண்டாம் என்பதை முடிவெடுக்கும் காலம் இது.
அவர்களே அதனை தீர்மானிப்பார்கள்.நாங்கள் தனித்தனியாக, அணி அணியாக பிரிந்து வாழ்தல் என்பது எமது இனத்துக்கான பண்பு அல்ல. இவ்வாறு பிரிந்து எமது இலக்கை அடையமுடியாது. எங்களுக்கு பிடிக்காதவர்களை ஓரங்கட்டக்கூடிய ஜனநாயக உரிமை இருக்கிறது.
அதன் மூலம் இனத்தின் விடுதலையை அடையக்கூடியவர்களை அல்லது பிடித்தவர்களை அருகில் வைத்திருக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது.
மக்கள் பொறுமையோடும் நிதானத்தோடும் ஒற்றுமையான பலமான தமிழ் தேசிய சக்தியை கட்டியெழுப்புவதற்கு பலத்தை உருவாக்க வேண்டும்.
இதனை விடுத்து சின்ன சின்ன அணியாக குழுக்களாக பிரிந்து செல்வதன் மூலம் எங்கள் இனத்தின் அடுத்த நகர்வுகள் பாழடைந்து செல்லும் நிலை அல்லது அது இல்லாமல் போகும் நிலை உருவாகிவருகிறது.
ஆகவே, நீதிபதிகளான நீங்கள் என்ன தெரிவு செய்யப்படவேண்டும், எதை தெரிவு செய்யவேண்டும் என்பதை நீங்களே தீர்மானம் எடுத்து முடிவெடுத்தால் பொருத்தமானதாக இருக்கும். மூத்தவர் ஒருவர் கூறிய முதுமொழி... அயோக்கியர்களை தெரிவுசெய்கிறோமா?
நல்லவர்களை தெரிவு செய்கிறோமோ என்பது தெரிவுசெய்பவனுடைய மன நிலையில் இருக்கிறது. தெரிவு செய்பவர்கள்தான் அதற்குரிய நீதிபதிகள்.
ஆகவே, உங்களுடைய கடமையை சரியாக செய்தால் உங்களுக்கான சரியான பக்கத்தையும் இனத்துக்கான வரலாற்று தொடக்கத்தையும் தரும் என்றார்.
அத்தோடு, முன்னாள் கட்சித் தலைவருடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள், பாராளுமன்றத்துக்குப் பின்னரான செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தயாரித்தல், மக்களிடம் செல்லுதல் போன்ற பல விடயங்களை பேசியுள்ளதுடன் அவரது நல்லாசியை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.