இந்தியா உதவி திட்டம் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அதிகமாக கிடைத்தது! பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தெரிவிப்பு..
50 வீத நலிவுற்ற மக்கள் வாழ்கின்ற கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்கு இந்திய அரசின் உதவி திட்டம் அதிகமாக கிடைத்ததாக கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தெரிவித்தார் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை உரும்பராய் கற்பக இராஜேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்ற ஞான வைரவ அறக்கட்டளை நிறுவனத்தின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் தற்போது அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டமையை இட்டு மகிழ்வடைகிறேன்.
ஏனெனில் எமது பிரதேச மக்களுக்காக நாம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் போது மறுப்புத் தெரிவிக்காமல் பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருந்தார்.குறிப்பாக சொல்ல வேண்டுமானால்
இந்திய அரசினால் யாழ்ப்பாண மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டபோது எமது பிரதேச செயலக பிரிவுக்கு சுமார் 22 லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுகளை வழங்குவதற்கு ஆவணை செய்தார்.
அதிக நலிவுற்ற மக்கள் வாழும் நமது பிரதேச செயலகப் பிரிவுக்கு அப்போதைய அரச அதிபரால் சிபாரிசு செய்யப்பட்ட சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை சுமார் 22 ஆயிரத்து மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுகளை உரிய முறையில் பகிர்ந்தளித்தோம்.
எமது பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மக்களுக்கு பல தேவைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்று இயன்ற அளவு நிவர்த்தி செய்து வருகிறோம்.
ஆகவே சமூக அறக்கட்டளை நிறுவனங்கள் தமது பிரதேசத்தில் தேவைப்பாடுகளுடன் வாழும் மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.