உடனடி நடவடிக்கை எடுங்கள்! தேவை இருப்பின் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவ ஒத்துழைப்பை பெறுங்கள் - அமைச்சர் டக்ளஸ் அதிரடி உத்தரவு...

ஆசிரியர் - Editor I
உடனடி நடவடிக்கை எடுங்கள்! தேவை இருப்பின் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவ ஒத்துழைப்பை பெறுங்கள் - அமைச்சர் டக்ளஸ் அதிரடி உத்தரவு...

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரிப்பு மற்றும் சட்டவிரோத செயறப்பாடுகளின் அதிகரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸாரை பணித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேவை இருப்பின் அதிரடிப்படை மற்றும் இராணுவ ஒத்துழைப்பை பெறுமாறும் கேட்டுள்ளார். 

மேலும் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் நீதியமைச்சரோடு கலந்துரையாடி சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுடனான முன்னாய்த்த கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதன்போது சமூகப் பாதுகாப்பு, கல்வி, விவசாயம், காணி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட சுமார் 12 விடயதானங்கள் ஆராயப்பட இருந்த நிலையில், பிரதேசத்தின் நன்மை கருதி சமூக பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரம் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது. 

அதேபோன்று போதைப் பொருள் பாவனை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர்கள் சில நாட்களிலேயே பிணையில் விடுதலையாகி வெளியே வந்து தங்களது செயற்பாடுகளை தொடர்வதுடன் ஏனையவர்களுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது போதைப் பொருள் பாவனை, பாலியல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம், கொலை, கொள்ளை, கால்நடைகள் திருட்டு போன்ற சமூக சீர்கேடுகள் அதிகரிப்பதற்கு விழிப்புணர்வு இன்மையும் காரணமாக இருக்கின்ற நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத் திட்டங்கள் அதிகரிக்கப்படுவதுடன், 

சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த முனைகின்ற அதிகாரிகள் மற்றும் தகவல்களை வழங்குகின்ற சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாவும் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவோரின் விபரங்கள் சம்மந்தப்பட்ட சமூக விரோதச் செயற்பாட்டாளர்களுக்கு தெரியவருவது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த உதவிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு வழங்கப்படுகின்ற தகவல்கள் தொடர்பான இரகசியம் பேணப்படுவதற்கான பொறிமுறை இருப்பதாகவும், எனினும் கடந்த காலங்களில் சில சம்பவங்கள் கண்டறியப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "சமூகப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் என்பது வெறுமனே கூடிக்கலைவது என்றில்லாமல் ஆரோக்கியமானதாகவும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். 

இங்கு பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையிலும் பிரஸ்தாபித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளேன். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி எமது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதே என்னுடைய தொடர்ச்சியான சிந்தனையாகவும் செயற்பாடாகவும் இருக்கின்றது" என்று தெரிவித்தார்.

இதேபோன்று, ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி மக்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு