யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானங்கள் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும்! டக்ளஸ் அறிவிப்பு..
மக்களுக்காக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி எமது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்பதே என்னுடைய தொடர்ச்சியான சிந்தனையாகவும் செயற்பாடாகவும் உள்ளது என கடற்தொழில் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் தலைவராக முதலாவது மாவட்ட அபிவிருத்தி முன் ஆயத்த கலந்துரையாடலை நடாத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது செயற்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் மையப்படுத்தியதாகவே அமையும். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை வேண்டும். அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ர பொலிஸ் மா அதிபருடன் பிரதேச செயலாளர்கள் நெருங்கிய உறவைப் பேணுவதன் மூலம் தமது பகுதிகளில் ஏற்படும் பிரச்சனை தொடர்பில் இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பதற்கு மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை
அமைச்சரவையில் பிரஸ்தாபித்து அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், மேலதி அரசாங்க அதிபர் பிரதீபன் ,மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன்( காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் நீக்லஸ்பிள்ளை,
பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாகாண அமைச்சின் செயலாளர், முப்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.